இப்படியும் ஒரு மோசடியா? வௌியான அதிர்ச்சி தகவல்!!

கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

அஸ்பெஸ்டாஸ், சீமெந்து அல்லது பிற பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரங்களை வெளியிட்டு ஆர்டர்களைப் பெறுவது இதன் முதற்கட்டமாக அமைகின்றது.

அவ்வாறு பெறப்படும் ஆர்டருக்கு அமைவாக, மோசடி செய்பவர்கள் ஆர்டர் செய்த நபர் வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர் (Building material dealer) ஒருவர் மூலமாக குறித்த முகவரிக்கு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

பொருட்கள் முகவரியைச் சென்றடைந்தவுடன், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு தமது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக வைப்புச் செய்ய வைக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், பொருட்களைக் கொண்டு வந்த சாரதி அதற்கான பணத்தைக் கேட்கும் போதே, தாம் ஒரு மோசடிக்காரனிடம் ஏமாந்துவிட்டோம் என்பதைப் பாதிக்கப்பட்ட நபர் உணர்ந்து கொள்வதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts