Ad Widget

இன அழிப்புக்கு ஈபிடிபி பொறுப்புக்கூற வேண்டும்; கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

யுத்தத்தின் போது இடம்பெற்ற இன அழிப்புக்கு ஈபிடிபியும் அதன் தலைமையும் பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

kajenthera-kumar

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துவரும் கருத்து வேடிக்கையான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மாத்திரமன்றி, ஒட்டுக்குழுவின் தலைவராக இருந்த காலத்திலும் வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மிக மோசமான கொடூரமான வேலைகளை செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போர்க்குற்றங்கள் செய்கின்ற அளவுக்கு அவருடைய செயற்பாடுகள் அமைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இன அழிப்பிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்துகின்ற போது, ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய இராணுவம், முப்படைகள் மாத்திரமல்ல, ஒட்டுக்குழுக்களையும் விசாரித்து தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுதுள்ள அரசாங்கம் தங்களுக்கு எடுபிடியாக கூட்டமைப்பை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

அரசாங்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தேவைப்படாத காரணத்தினால் அவர் ஏதோவொரு வகையில் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்காக 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு செய்த அநியாயங்களை மறைப்பதற்காக இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் நடைமுறையில் வந்தால் பாரதூரமான விளைவிகளை தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts