Ad Widget

இன அடையாளத்தை காப்பாற்றுமாறு பறங்கியர் கோரிக்கை

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

burgers_sri_lanka

புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள், தேவைகள், அடையாளங்கள் ஆகியவை உரிய முறையின் கவனத்தில் எடுக்கப்பட்டு புதிய அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பறங்கியர் வலியுறுத்தியுள்ளனர்.

பைலா நடனம், கிரியோல் மொழி போன்றவை தமது தனித்துவ அடையாளங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் போன்று பறங்கியரும் தேசிய இனங்களில் ஒன்றாக கருதப்பட்டனர் என அந்த சமூகத்தினர் மட்டக்களப்பில் இடம்பெற்ற அமர்வில் அரச குழுவிடம் தெரிவித்தனர்.

பறங்கிய இனத்தவருக்கு தனித்துவமான உடை மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன என வலியுறுத்தியுள்ள அவர்கள், இந்த விஷயங்கள் தொடர்பில் பல இடங்களின் தாங்கள் நெருக்கடிகளை சந்திப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல இடங்களில் பறங்கியர் இனப் பெண்கள் சேலை அணியும்படி வற்புறுத்தப்படுகின்றனர் எனவும் அந்த அரசக் குழுவிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

பாடசாலைகளில் போர்த்துகீஸ் மொழி கற்பிக்க புதிய அரசியல் சாசனத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts