Ad Widget

இன்று யாழ். வருகின்றார் பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ranil

அத்துடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ள பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யாழ். விஜயத்தில் அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், ரோசி சேனாநாயக்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது முதலில் நாகவிகாரைக்கு செல்லவுள்ள பிரதமர், பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொண்டு 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொதிகளை கர்ப்பிணிகளுக்கு வழங்குவார்.

அத்துடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் அவர், பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மீள்குடியேறிய மக்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ லஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார், முஸ்லிம் பிரதிநிதிகளையும் இதன்போது பிரதமர் சந்திக்கவுள்ளார்.

நாளை சனிக்கிழமை, பலாலியில் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்று அங்கு பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

Related Posts