Ad Widget

இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் !

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

world-book-day

உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ – UNESCO) வினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளாகும்.

இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. பாரிஸ் நகரில் 1995 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28 ஆவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் யாதெனில் “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 ஆம் திகதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்”.

எனவே இந்த தீர்மானத்திற்கு அமைவாக 1995 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அறிவை பரப்பும் நோக்குடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது .

ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அத்துடன் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவும் இந்நாள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவிக்கிறது.

யுனெஸ்கோவுடன் இணைந்து அனைத்துலக நூலக சங்கங்கள் மற்றும் அனைத்துலக பதிப்பாளர் சங்கங்களும் இந்நாளை அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts