இன்று உலக எயிட்ஸ் தினம்!

உலகளாவிய ரீதியில் அனைத்து நாட்டவர்களாலும் இன்று (01) உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இம்முறைக்கான கருப்பொருளாக “செயற்பாடுகளுக்கான நேரம் தற்பொழுது ஆரம்பம்” (The Time to Act Is Now) ​அமுல்படுத்தப்பட்டுள்ளது. எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற, எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.

அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் மத்தியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.

Acquired Immune Deficiency Syndrome என்ற சொற்றொடரின் சுருக்கமே AIDS – எயிட்ஸ் என்பதாகும். அதாவது பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறி குறி என்பது கருத்தாகும். மேலும் விரிவாகச் சொல்வதென்றால் எமது உடலில் தொற்றுகின்ற நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி அக் கிருமிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி நோய்களில் இருந்து எமது உடலை பாதுகாப்பதற்காகப் போராடுகின்ற அமைப்பு நிர்ப்பீடணம் அல்லது நோய்த் தடுப்பாற்றல் நோய் எதிர்ப்பு சக்தி என அழைக்கப்படுகிறது.

இந்த சிறப்பு பாதுகாப்புக்குரிய அமைப்புக்கள் – கலங்கள் அழிக்கப்படுவதன் விளைவே எயிட்ஸ் நோய் நிலைமை ஆகும். எனவே இது ஒரு தனி நோய் அல்ல. ஆனால் தடிமன் போன்ற சாதாரண தொற்று நோய் ஒன்றின் மூலமே மரணம் சம்பவிக்கலாம். காரணம் அந்த நோய்க் கிருமியை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றலை உடல் இழந்துள்ளமையாகும். HIV எனப்படும் வைரசு வகையைச் சேர்ந்த நுண்ணங்கியினால் – நோய்க் கிருமியினால் இது எற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts