Ad Widget

இன்று உலக இரத்ததான தினம்!

உலக இரத்ததான தினம் (World Blood Donor Day ) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14 ஆம் திகதியாகிய இன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான இரத்ததான தினமானது “இரத்தம் எங்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கின்றது” (“Blood connects us all”) என்ற தொனிப் பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல இரத்த வழங்குநரும், பெறுநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். அத்துடன் அனைவருக்கும் பொதுவான இரத்த தானத்தின் மூலம் இன, மத, மொழி, நிற, பேதங்களை மறந்து அனைத்து மக்களுக்கும் ஒருவருக்கொருவர் உதவ முடியும்.

ஒருவரினால் வழங்கப்படும் இரத்தத்தின் மூலம் தலசீமியா, ஹிமோபிலியா, டெங்கு போன்ற இரத்தம் சம்பந்தமான நோயாளிகளும், சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுவோர், மகப்பேறு அடையும் தாய்மார், அவசர விபத்துக்குள்ளாவோர் என உலகம் முழுவதுமுள்ள இலட்சக் கணக்கான மக்கள் தமது உயிரை மீளப் பெறுகின்றனர். இத்தினம் இலவச இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவதோடு இலவச இரத்த தானம் வழங்குவோரை பாராட்டுவதாகவும் அமைகின்றது. இத்தினத்தினை பரவலாக அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்தானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகி விடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும். இரத்த தானம் செய்ய முற்படும் ஒருவர் 50 கிலோகிராம் எடையிலும் அதிகமாக இருக்க வேண்டும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகி விடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை. உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது. இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது என்பது வைத்தியர்களினால் கூறப்படும் அறிவுரையாகும்.

Related Posts