Ad Widget

இன்னும் த.தே.கூ இறுதி முடிவு எடுக்கவில்லை!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்தில் இழுபறியில் உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அங்குள்ள மலையக மக்களைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பொதுவான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற தமிரசுக் கட்சியின் திருகோணமலை கூட்டத்தில் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு இம்முறை வேட்பாளராக சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோது, அத்தகைய முடிவொன்று உண்மையாக அங்கு எடுக்கப்பட்டதா என்பதை முதலில் ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்தகைய முடிவெடுக்கப்பட்டிருந்தால், அதனைத் தீர்மானித்த கட்சி அதனை நடைமுறைப்படுத்திய பின்னர் அது குறித்து யோசிக்கலாம் என குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன், இதனை சாத்தியமற்ற ஒரு திட்டமாகவே தான் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

Related Posts