Ad Widget

இனிமேல் கைதுகள் இடம்பெற்றால் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்

எதிர்காலத்தில் கைதுகள் நடைபெற்றால், அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

வடக்கில் அண்மையில் நடைபெறு்ற கைதுகள் பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகள் மற்றும் ஏனைய கைதுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். சந்தேகத்தின் பேரில் யாரையும் கைதுசெய்யக் கூடாது என சொல்ல முடியாது.

சந்தேகத்தின் பேரிலும், சாதாரண சட்டத்தின் கீழும் நபர் ஒருவர் கைதுசெய்யப்படலாம். கைதுசெய்யும் போது சட்டத்தின் கீழான முறை ஒன்று உள்ளது.

அவசர காலசட்டம் இருக்கும் போது, விசேடமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், உடனடியாக பற்றுச் சீட்டு ஒன்று கையளிக்கப்பட வேண்டும்.

தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லாத போதும், அந்த நடைமுறையினை செயற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்.

பலர் காணாமல் போயுள்ள சூழ்நிலையில் இவ்வாறான கைதுகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறான கைதுகள் பற்றி அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

இனிமேல் இவ்வாறான கைதுகள் இடம்பெறாது என அரசாங்கம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில் கைதுகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றால், எதிர்ப்புத் தெரிவிப்போம்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், நேற்றும் இன்றும் கைதுகள் நடைபெறவில்லை. இனிவரும் காலங்களில் கைதுகள் நடைபெறாது என்பது எமது நம்பிக்கை என்றார்.

Related Posts