Ad Widget

இனவாதிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்: 19வது திருத்தத்திற்கு அனைவரும் வாக்களிக்கவும்

நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்திருக்க விரும்பும் சிலரே நாட்டில் குழப்பத்தை தோற்றுவித்து வருவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு சிறப்புச் சலுகை வழங்குவதாகவும் வடக்கில் இராணுவம் அகற்றப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பகுதி காணிகள் முன்னாள் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொய் பிரச்சாரங்களை முன்வைப்பதாகவும் காணி உரிமையாளர்களுக்கு காணியை மீள கையளிப்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள மக்களை பொறுத்த வரை அவர்கள் தமது அடையாளத்தை பேணும் அதேநேரம் ஏனைய மக்களின் உரிமைகளையும் மதிக்கும் கடப்பாட்டை கொண்டிருப்பதாக மைத்திரிபால குறிப்பிட்டார்.

நாட்டில் ஊடக சுதந்திரம் காணப்படுவதாகவும் ஆனால் சில ஊடகங்கள் இதனை தவறாக பயன்படுத்தி பொய் பிரச்சாரங்களை செய்வது ஏன் என தனக்கு புரியவில்லை என ஜனாதிபதி கூறினார்.

100 நாள் திட்டத்தில் என்ன செய்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவதாகவும் முன்னைய அரசாங்கம் பிளவுபடுத்தி வைத்திருந்த சர்வதேச நாடுகளுடனான தொடர்பை மீள கட்டியெழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியா, சீனா, பாகிஸ்தான், இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று வலய நாடுகளையும் மேற்குலக நாடுகளையும் வெற்றிகொண்டுள்ளதாகவும் அவர்களுடன் பிளவுபடாத உறவு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதகவும் சர்வதேசமும் உள்நாட்டு மக்களும் இன்று தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை சர்வமத நாடு என்ற அடிப்படையில் ஒரு பிரிவு இன்னொரு பிரிவை பார்த்து சந்தேகம், பயத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை இல்லாது நல்லிணக்கத்துடன் ஐக்கிய உறவுடன் வாழ் வேண்டிய சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் சுதந்திரமாக பேச முடியாத நிலை காணப்பட்டதாகவும் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் ஆனால் புதிய ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக பேசக்கூடிய ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்க காலத்தில் நீதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டு அடிமை நிலையில் இருந்ததாகவும் ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் அந்த நிலை மாறியுள்ளதாகவும் தான் ஜனாதிபதியாக பதவியேற்றது தொடக்கம் இதுவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் எவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்புக்கூட எடுத்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தேர்தல் காலத்தில் அச்சமின்றி குடும்பத்துடன் நடுக்கடலில் குதித்தது போன்று எதிர்வரும் காலத்திலும் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தயங்கப் போவதில்லை என்றும் அவ்விடயத்தில் சிறிதளவும் அச்சமின்றி செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதி அளித்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் அடிமை தனத்தில் இருந்து மக்கள் மீட்டெடுக்கப்பட்ட பின் சிலர் மீண்டும் அடிமைத் தனத்திற்கே செல்ல ஆசைப்படுவதாகவும் அவர்கள் இலங்கை மக்களையும் வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களையும் தவறாக வழிநடத்தி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் நாட்டு மக்கள் அதற்கு ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மக்கள் புத்தியுடன் சரியான முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்திற்கு வந்த பின் உலகில் எந்தவொரு தலைவரும் அதிகாரத்தை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள் என்றும் ஆனால் தான் ஒரு முன்னுதாரணமாக இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் வரம்பற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு உயர் நீதிமன்றில் அனுமதி கேட்டதற்கு இணங்க உயர் நீதிமன்றம் 19வது திருத்தச் சட்டம் குறித்து தீர்ப்பளித்துள்ளதாகவும் இது வரலாற்றில் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம் என்பதால் பாராளுமன்றில் உள்ள அனைத்து மக்கள் பிரநிதிகளும் தங்களது பெறுமதியான வாக்கை 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேர்தல் முறையிலும் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறினர். தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய திட்டங்களை வகுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பொறுப்புகூறல் பொறுப்பு வகித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related Posts