Ad Widget

இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசமைப்பின் மூலம் இணக்கப்பாடு!- சம்பந்தன்

“புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பணிகளை குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்றத்தை மாற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் சர்ச்சை ஏற்பட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.,

“தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே அரசமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் இணக்கப்பாடு இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கருத்தைக் கூறுகின்றார். அமைச்சர் சுனில் பிரேமஜயந்த மற்றொரு கருத்தைக் கூறுகின்றார்.

அரசமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் அரசிலுள்ள இரு கட்சிகளிடம் இணக்கப்பாடு இல்லை என்ற இதனூடாகத் தெரிகின்றது. இதனால்தான் இந்தப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக மாற்றுவதற்கு இன்று (நேற்று) இடம்பெறும் விவாதத்தை இன்றே முடித்து சட்டமூலத்தை நிறைவேற்றலாம். ஏன் அதைப் பிற்போடுகின்றீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பிக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அப்படியானால் இதை நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழிபோட்டார்.

இதையடுத்து, கருத்தொன்றை முன்வைத்த அமைச்சர் ஜோன் செனவிரட்ன,

“அரசமைப்பு மறுசீரமைப்பு குறித்து பேச்சு நடத்துவதற்காக அனைவரின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்காக தற்போது விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி அரசின் கருத்தை பிரதமரோ அல்லது சபை முதல்வரோ முன்வைப்பார்” என்றார்.

இதனிடையே கருத்தொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.,

“நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக மாற்றுவதற்காகத்தான் நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். 1978ஆம் ஆண்டு அரசமைப்பை கைவிடவேண்டும். அதிலுள்ள பல அம்சங்கள் ஏற்புடையவையல்ல. அதனால் புதிய அரசமைப்பை உருவாக்க 225 எம்.பிக்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கு நாம் இணங்கியுள்ளோம்.

புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குதல், புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவது குறித்தும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை குழப்பு தாமதப்படுத்தக்கூடாது” என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, கருத்தொன்றை முன்வைத்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.,

“கடந்த 9ஆம் திகதி காலையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் குறித்து இப்போதுதான் விவாதிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர் கூட்டத்திலும் இதுபற்றி பேசப்படவில்லை. மேலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சட்டமூலத்தையும் பிற்போட்டுதான் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை ஏன் பிற்போடுகின்றீர்கள்? அரசுக்குள் இணக்கப்பாடு இன்றித்தான் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. காலத்தை வீண் விரயம் செய்யாமல் இந்தச் சட்டமூலத்தை இன்றே (நேற்று) நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

இதையடுத்து, தனது உரையில் மீண்டும் கருத்து வெளியிட்ட சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி., “இந்தச் சட்டமூலத்தை இன்று (நேற்று) நிறைவேற்றவேண்டும்” என்றார்.

இவ்வாறாக சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்த நிலையில் குறுக்கிட்ட பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, “விவாதத்தில் உங்களுக்கு (சுனில் ஹந்துன்நெத்தி) ஒதுக்கியுள்ள நேரத்தில் நீங்கள் உரையாற்றலாம். உங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், திட்டமிடப்பட்ட தினப் பணியை உங்களால் மாற்றமுடியாது” என்றார்.

இதன்பின்னர் சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதும், தனது உரையைத் தொடர்ந்த சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி., “அரசமைப்பு மறுசீரமைப்பு விடயத்தை ஐ.தே.க., சு.கதான் சீர்குலைக்கின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.

Related Posts