Ad Widget

இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சி: சிவாஜிலிங்கம்

எமது இனப்பிரச்சினை தீரும்வரை நாங்கள் எதிர்க்கட்சிதான். இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் அண்ணன், தம்பி என்ற நிலையில் உள்ளார்கள். ஆனால், அதிகூடிய துன்பத்தை விளைவித்தவரை அகற்றவேண்டும் என்பது இன்றைய நிலைமை’ இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Sivaji-lingam

யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல், பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கமுடியாது. குறைந்தது ஒரு கோரிக்கையை முன்வைக்கவேண்டும். தந்தை செல்வா, தனது காலத்தில் நிலத்துக்கான முக்கியத்துவத்தை கொடுத்தார். அதேபோல், தற்போது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதிலே 90 சதவீதமான காணிகளை மீட்டுத் தருவேன் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறவேண்டும்.

நிபந்தனை ஒன்றை கூறி அதையாவது, நாம் பெறக்கூடியதாக இருந்தால், மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேவையற்ற பேச்சுக்களை பேசி இனத்துக்கு கிடைக்கக்கூடிய நன்மையை இழக்கவேண்டாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானத்தை எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

மூன்றாம் சக்தியாக உள்ள வேட்பாளர்களான ஐக்கிய சோசலிஸ கட்சியின் வேட்பாளர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய, நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளர் சுந்தரம் மகேந்திரன் ஆகியோர் மிகத்தெளிவான கொள்கையை கொண்டுள்ளார்கள். அதாவது, சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவு கிடைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. அதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நான் பணம் வாங்கியதை சுமந்திரன் உறுதிப்படுத்திக் காட்டட்டும்

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் சில கருத்துக்கள் என்னை பற்றி கூறியிருந்தார்.

45 கோடி ரூபாவை பெற்றுக்கொண்டு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆதரவு தெரிவித்ததாகவும் இனப்பிரச்சினை தொடர்பாக பிரேரணை கொண்டுவந்திருப்பதற்கும் அவ்வாறு பணம் பெற்றுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரனிடம் நான் கேட்க விரும்புகின்றேன், பணம் வாங்கியிருந்தால் ஏன் என்னை வடமாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நியமித்தீர்கள். நான் கள்வன் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கள்வர்களுடைய கூடாரம் என்று சொல்கிறீர்களா? என சுமந்திரனை கேட்கின்றேன்.

மார்ச் மாதம்வரை இனப்படுகொலை தீர்மானத்தை அனுமதிக்கமாட்டோம் என்று கூட்டத்தில் கூறியிருக்கிறார். அதன் நோக்கம் ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தொடரில் யாரோ ஒருவருடைய நிகழ்ச்சிநிரலுக்காக அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கின்றார்கள்.

ஒரு சிலர் அமைச்சர் ஆகும் கனவில் இருக்கிறார்கள். சர்வதேசத்தை எதிர்த்து வேட்பாளர்களுடன் இணைந்தால், சர்வதேசம் எங்களை விட்டு விலகும். அது மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.

தற்போது தேர்தல் காலத்தில் கோடிக்கணக்கான பணம் புரண்டு கொண்டு இருக்கின்றது. இதில் யார் யார் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பது வெகுவிரைவில் தெரியவரும். அதனை தற்போது தெரிவித்து மக்களை குழப்ப விரும்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஆனால், ஒருபக்கம் வேடன். மறு பக்கம் நாகம். இரண்டுக்கும் நடுவில் நாங்கள் இருக்கின்றோம். அதனை புரிந்து கொண்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

Related Posts