Ad Widget

இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நல்லாட்சியில் மீண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரும் ஒத்துழைக்கும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வுக்காண முடியும்.

எமது ஆட்சியில் மீண்டும் தற்பொழுது அரசியலமைப்புத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சகல கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நிபுணர்களின் வரைபு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு நாம் அனைவரும் வருவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும்.

மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Posts