இந்த தேசிய அரசாங்கத்திலாவது தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். கடந்த காலத்தில் மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு அமைய இப்போதும் ஒரு கூட்டு அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது.
ஆகவே அதில் நாட்டின் நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் தேவைகளையும், நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த புதிய அரசாங்கம் செயற்ப்பட வேண்டும். நாட்டுக்கும் மூவின மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாம் ஆதரிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டுக்கு தேவையான கருத்துக்களை நாம் முன்வைப்போம்.
எனினும் நாம் இந்த தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். பாராளுமன்றத்திலும் நாம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினோம். எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லைவில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
அதே நிலைப்பாடே இப்போதும் உள்ளது. இந்த தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதை அவசியமற்ற ஒன்றாகவே கருதுகின்றோம். நாட்டில் குறைந்த அமைச்சரவையை கொண்ட நாடுகள் சிறப்பாக செயற்படுகின்றமைக்கு பல உதாரணகளை முன்வைக்க முடியும். ஆகவே அதை அரசாங்கம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எனினும் ஏனைய விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் வரவேற்போம். கூட்டு அரசாங்கம் இன்று உத்தியோக பூர்வமாக அமைந்துள்ளது. அதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மேலும் இந்த நாட்டில் இன்னும் தீர்க்க வேண்டிய தேசியப் பிரச்சினைகள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுய அவசியம் உள்ளது. அதுவும் விரைவில் ஒரு தீர்வு வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். ஆகவே அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் இந்த அரசாங்கத்துக்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.