Ad Widget

இனப்பிரச்சினைக்கு தீர்வின்றி தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை

போர் குற்றத்திற்கான நீதி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன கிடைக்கும் வரை தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்ற கருத்தினை ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடியோடு மறுதலித்துள்ளார்கள்.

சர்வதேசம் வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணையினை வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் இலங்கையில் நடைபெறும் கள நிலவரங்களை பார்க்கும் போது உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை குமாரபுரத்தில் 26 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சுடப்பட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

கொலை செய்தவர்களை இணங்காட்டி சாட்சியமளித்ததன் பின்னரும், யூரி சபையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 6 இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

அதேவேளை, பட்டினிக்கான அமைப்பு (action farm) நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்கள் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என தெளிவாக தெரிந்ததன் பின்னரும், உள்நாட்டு விசாரணையாளர்களை வைத்துக்கொண்டு சர்வதேச விசாரணைகளை நடாத்துவோம் என்று கூறுவது ஏமாற்று நாடகம் என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts