Ad Widget

திருகோணமலையில் இந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு!!

தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளின்போது அங்கு காணப்பட்ட இந்துக்கோயிலின் அஸ்திவாரத்தை உடைத்து சிவன் ஆலயத்திற்கு அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஆராய குறித்த பகுதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்தாலோசித்தார்.

அதன் பின்னர் இந்த விடயம் காரணமாக குறித்த பகுதியில் இன முரன்பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், அப்பகுதியின் புனரமைப்புப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இதன்போது பணிப்புரை விடுத்ததோடு, இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலின் அஸ்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர், குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் நேற்று மீண்டும் குறித்த உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்தே அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ.சுமனதாச கருத்துத் தெரிவிக்கையில், கன்னியா பகுதியில் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகில றமணி, தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்காண காணி உருதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும்தெரிவித்தார்.

எனினும் சில பிரச்சினைகள் காரணமாக குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.

Related Posts