Ad Widget

இந்திய வீட்டுத் திட்டத்தை வழங்குவதில் பாலியல் இலஞ்சம் : விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது:

வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால், பாலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என, தமிழ்ப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக, 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கூட்டு விசாரணையை தொடங்கியுள்ளன. இது போன்ற செயலை, இந்தியா பொறுத்துக் கொள்ளாது என, இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா, 50,000 வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசுடன், இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றன.

வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய, செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், பாலுறவுக்கு அழைத்ததாக, விதவைப் பெண் ஒருவர் கடந்த மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுபோல் பல புகார்கள் குவிந்து வருகின்றன.

Related Posts