Ad Widget

இந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி பொன்னம்பலம்

nakanaathy-ponnampalamஇழுவைப் படகை பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்தியா தடை செய்ய வேண்டும். இவ்வாறு எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதில் தவறு இல்லை. இலங்கை கடற்படையினர் தமது கடமையினை சரிவரச் செய்கின்றனர் என யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடற்றொழில் அமைச்சின் டெல்லி சந்திப்பின் காரணமாகத் தான் எதிர்வரும் 20ஆம் திகதி இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முன்பு இந்தியாவுடன் சந்திப்பினை மேற்கொண்ட குழுவினர் இந்திய மீனவர்களை கிழமைக்கு மூன்று முறை இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கிறோம் என்று கூறியமையே இப்பிரச்சினைக்கு மூல காரணமாகும்.

தற்போது இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி பெரும் பிரச்சினையாக உள்ளது. இவர்கள் இழுவைப் படகின் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு எல்லை தாண்டி எமது மீன்களை கொண்டு செல்வது மட்டுமல்லாது எமது கடல் வளங்களையும் அழித்துச் செல்கின்றனர்.

இந்த இழுவைப் படகை அறிமுகப்படுத்திய நாடு நோர்வே. அவர்களே தற்போது இழுவைப் படகை சட்டரீதியாக நிறுத்தியுள்ளனர். அதேபோன்று இலங்கையிலும் இழுவைப் படகை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மீனவர்கள் தமது கடல் எல்லையை தாண்டி வந்து நம் கடற்பரப்பில் இழுவைப்படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே மேற்படி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படமாட்டாது என ஆணித்தனமாக கூறவுள்ளோம்.

மேலும் இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி இந்தியாவில் சிலர் அரசியல் நடத்துகின்றனர். இழுவைப் படகை பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்தியா தடை செய்ய வேண்டும். இவ்வாறு எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதில் தவறு இல்லை. அவர்கள் தமது கடமையினை சரிவரச் செய்கின்றனர்.

கடற்றொழில் மகா சம்மேளனம், கடற்றொழில் மாவட்ட சம்மேளனம், கிராமிய கடற்றொழில் அமைப்பு என மூன்று கட்டங்கள் உள்ளன. கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களங்களின் நடவடிக்கைகளில் கடற்றொழில் கூட்டுறவு அமைப்புக்கள் சட்டரீதியாக தலையிட முடியாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts