Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த மோடி, ஜெயலலிதாவுடன் ரணில் பேசவேண்டும்!

“தொழிலுக்காக கடன் எடுத்து அதை மீளச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வடக்கு மீனவர்களின் கடன்களை இரத்துச் செய்யவேண்டும்” என்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பியான மாவை சேனாதிராஜா.

“இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நினைத்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தலாம். இதற்கான வலியுறுத்தலை இலங்கை அரசு செய்யவேண்டும். இந்த விடயம் தொடர்பாக இந்தியப் பிரதமருடனும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பிரதமர் பேசித் தீர்க்கவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,

“வடபகுதி மீனவர்கள் அண்மையில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எமது கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அவற்றை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.

தென்பகுதி மீனவர்களை முற்றாகத் தடைசெய்தல், புதியவர்களுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது, இந்திய மீனவர்களின் வருகையைத் தடுக்க வேண்டும். கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களைத் தடுத்து வைக்காது விடுவிக்கவேண்டும் என்றவாறு அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு இந்திய மீன்பிடி படகுகள் எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இதனால், எமது மீனவர்களால் மீன்பிடிக்க முடியாதுள்ளது. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நினைத்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தமுடியும். இதை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழக முதலமைச்சருடனும், இந்தியப் பிரதமருடனும், எமது பிரதமர் பேசி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

மீன்பிடித்தொழிலை முன்னெடுப்பதற்காக வடபகுதி மீனவர்கள் கடன்களைப் பெற்றுள்ளனர். தமது தொழில் பாதிக்கப்படுவதால் இந்தக் கடனை மீளச் செலுத்த முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். எனவே, இவர்களின் கடன்களை இரத்துச் செய்து, மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், சில கரையோரப் பிரதேசங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. தென்னிலங்கை மீனவர்களும் அங்கு தொழிலில் ஈடுபடுகின்றனர். எனவே, இவற்றையும் அரசு கருத்திலெடுத்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.

Related Posts