Ad Widget

இந்திய மீனவரின் அத்துமீறல் எமது வாழ்வாதாரத்தில் வீழ்ந்த பேரிடி:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

daklasஇந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய கடற்றொழிலாளர்கள் மகாசம்மேளனத்தினுடைய முதலாவது தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி மகாசம்மேளன மாநாட்டில் நாடுமுழுவதிலிருந்தும் கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகள் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு தமிழ்பேசும் கடற்றொழிலாளர்கள் சார்பாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற நிலமையினையும் கடற்றொழில் தடை என்ற சூழ்நிலைமையினையும் மாற்றி எமது தாயகத்தில் சுதந்திரமாக கடற்றொழில் மேற்கொள்வதற்குரிய நிலைமையினை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலில் தனது மக்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் அரசாங்கத்திற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எடுத்துக்கூறி அதன் காரணமாக பெற்றுக்கொண்டிருக்கும் உதவிகள் ஊடாக கடற்றொழில் நடவடிக்கைகளானது மீண்டும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ளது. ஆனால் மரத்தால் விழுந்தவனை மாடேறி மித்ததுபோல இந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பல மட்டங்களிலும் நாம் முயற்சி எடுத்தும் எதுவும் பலனளிக்காதபடியினால் எனது தலைமையில் கடற்றொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் கடல் பேரணி ஒன்றை இந்திய மண்ணை நோக்கி மேற்கொண்டு இந்திய ரோலர்களின் அத்துமீறலை வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

மறுபுறம் கடற்றொழிலுக்கு பாதகமாக அமையும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகள் உடனடியாகத் தடைசெய்யப்படுவதுடன் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு அவரவர் கடற்பிரதேசங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு பிற மாவட்ட கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் முடிவிற்கு கொண்டு வரப்படவேண்டும்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு காவலரண்கள், தடைகள், பாஸ் நடைமுறைகள் என்பன அகற்றப்படுவது மற்றுமோர் முக்கிய விடயமாகும்” எனத் தெரிவித்த அமைச்சர், நிறைவாக “வெளிநாடுகளைப் போன்று கடலில் சில நாட்கள் தங்கியிருந்து கடற்றொழில் மேற்கொள்வதற்குரிய கலங்களும் வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை தேசிய கடற்றொழிலாளர்கள் மகாசம்மேளனத்தின் இம்முதலாவது பொதுக்கூட்டத்தில் வடபகுதியைச் சேர்ந்த நூற்றிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட நாடெங்கிலுமிருந்து பெருமளவு கடற்றொழில் சம்மேளனப் பிரதிநிதிகளும் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.

Related Posts