Ad Widget

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ். வருகையில் மாற்றமில்லை: வி.மகாலிங்கம்

mahalingam_indiaஇந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைக்கு வருவதில் எதுவித மாற்றமும் இல்லையென யாழ். இந்திய துணைத்தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்திய பாராளுமன்றக் குழு இலங்கை வருவது தொடர்பில் மாறுப்பட்ட செய்திகள் வெளியானது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளி விவகார அமைச்சின் உயர்மட்ட திட்டக் கண்காணிப்புக் குழுவினர் அடங்கிய உறுப்பினர்கள் எட்டுப் பேர் இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு நாளை புதன்கிழமை வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் இந்தியக் குழுவினர் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்குழுவில் லோக் சபா, ராஜ் சபா உறுப்பினர்கள் ஆறு பேரும் வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் வருகைதரவுள்ளனர்.

இவர்களில் லோக் சபா உறுப்பினர்களாகிய இந்திய திருநாமுல் கட்சியைச் சேர்ந்த சௌகத்தா றோய், பகுஜன் சமாயக் கட்சியைச் சேர்ந்த தனஞ்யய் சிங் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் மது கௌட்யக், சந்தீப் தீக்ரீத், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த அனுராத் தாகூர் ஆகியோருடன் ராஜ் சபா உறுப்பினராகிய பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த பிரபா ஜவதேகர், வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாக சிறப்புச் செயலாளராகிய பி.எஸ்.இராகவன், வெளிவிவகார அமைச்சின் சிறப்புச் செயலாளரும் நிதி ஆலோசகருமாகிய பிமல் ஜுல்கா ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

வருகைதரும் இக்குழுவினர், காங்கேசந்துறை துறைமுகத்தின் மூன்றாம் கட்ட ஆழமாக்கும் திட்டம், இந்திய வீட்டுத்திட்டம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, குருநகர் வடகடல் நிறுவனம், அறிவியல் நகரில் அமைக்கப்படவிருக்கின்ற யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடம், விவசாயபீடம் ஆகியவற்றைப் பார்வையிட இருப்பதுடன், கிளிநொச்சி, முல்லைத்தீவில் போரினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இலங்கை வர்த்தக சங்கத்தின் இணையத்தளத்துடன் இணைந்து வர்த்தக நிலையப் புனரமைப்புக்கு நிதி வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வு எதிர்வரும் 11ம் திகதி கிளிநொச்சி கூட்டுறவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மொத்தமாக ஆயிரத்தி 230 பேருக்கு வர்த்தகப் புனரமைப்பிற்காக 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளனர். அவர்களில் 20 பேருக்கு அடையாள நிகழ்வாக அன்றைய தினம் வழங்கவுள்ளதாகவும் இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி
இந்திய எம்.பிக்கள் குழு புதனன்று யாழ் விஜயம்

Related Posts