Ad Widget

இந்திய உதவியில் இலங்கையில் மேலும் 26 அபிவிருத்தி திட்டங்கள்: அசோக் கே. காந்தா

India_-ashok_kantha“கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் இலங்கையில் 36 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 26 அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா, இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளது” என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

இதேவேளை, “யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி புகையிரதச் சேவை அடுத்த வருடம் மார்ச் மாதம் சேவையில் ஈடுபடும் என்றும் இதன் மூலம் வடக்கின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குருநகரில் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,

“2009ஆம் ஆண்டு நான் எனது பதிவியைப் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் 20 தடவைகளுக்கு மேல் வடபகுதிக்கு விஜயம் செய்திருக்கின்றேன். வடமாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்ற விடயங்களில் சிரத்தையோடு எனது கடமைகளை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.

“வேறு பதவியின் நிமிர்த்தம் நான் இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு செல்ல இருக்கின்றேன். பெரும்பாலும் இந்த பயணம் யாழ் மாவட்டத்திற்கான எனது இறுதிப் பயணமான அமையலாம். நான் பதவி ஏற்ற காலம் தொடக்கம் இதுவரை 36 திட்டங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியிருக்கின்றோம். 26 திட்டங்கள் இன்னமும் மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளன” என்றார்.

“குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டம், விவசாயிக்கான உழவு இயந்திரம் வழங்கல், துவிச்சக்கரவண்டி வழங்கல் போன்ற பல்வேறு மக்கள் வாழ்வாதாரத் திட்டங்களுடன் வடக்கிற்கான புகையிரதப்பாதை புனர்நிர்மானப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

“அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கிற்கான புகையிரதச் சேவை மதவாச்சியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் அடுத்த வருடம் மார்ச் மாதம் யாழ் தேவி புகையிரத சேவை யாழ்ப்பாணம் வரையும் அங்கிருந்து காங்கேசன்துறை வரையும் நடைபெறும். புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் இதன் மூலம் வடக்கின் பொருளாதாரம் மேம்பாடடையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையானது இந்தியாவிற்கு நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் இங்கு முன்னெடுத்த முயற்சிகளுக்கு அரசும் மக்களும் போதியளவு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் எமது நன்றிகள்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts