இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான நிலையில் இலங்கை!!

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது.

இப் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இலங்கை கடுமையாக போராட வெண்டிவரும். ஆனால், 6 விக்கெட்கள் மாத்திரமே மீதம் இருப்பதால் இலங்கை முழு நாளும் தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகமாகும்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 373 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, போட்டியின் நான்காம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் படி இலங்கை வெற்றிபெறுவதற்கு மேலும் 289 ஓட்டங்களைப் பெறவேண்டும். அதேவேளை, இந்தியா வெற்றிபெறுவதற்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவேண்டும்.

நேற்றைய தேநீர் இடைவெளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சீரான இடைவெளியில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாற்றம் அடைந்தது.

நிஷான் மதுஷ்க (6), தினேஷ் சந்திமாலின் உட்காய அதிர்ச்சிக்கான மாற்றுவீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் பசிந்து சூரியபண்டார (0), கமிந்து மெண்டிஸ் (2), லஹிரு உதார (16) ஆகிய நால்வரும் தடுமாற்றத்துக்கு மத்தியில் ஆட்டம் இழந்தனர்.

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, முதலாவது இன்னிங்ஸில் கன்னிச் சதம் குவித்த சொனால் தினூஷ ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி விக்கெட்களைத் தக்கவைத்துக்கொண்டு நான்காம் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடனும் சொனால் தினூஷ 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் இன்றைய கடைசி நாளன்று முதலாவது ஆட்டநேரம் முழுவதும் தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடவேண்டிவரும். அல்லது இலங்கை தோல்வி அடைவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

கே.எல். ராகுல், தேவ்டத் படிக்கல், ரிஷாப் பான்ட் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related Posts