Ad Widget

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது மஹிந்த அரசு! – பிரதமர் ரணில்

இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார்.

2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

இந்த விடயம் உண்மை ஆணைக்குழு ஊடாக வெளிவந்துவிடும் என அஞ்சுகின்றீர்களா என்றும் அவர் வினா எழுப்பினார்.

அத்துடன், இறுதிக்கட்டப் போரின்போது நடந்த முக்கிய பல விடயங்களையும் அவர் சபையில் அம்பலப்படுத்தினார்.

புலித்தேவன் ஏன் அரச படையினரிடம் சரணடைய வந்தார் என்பதற்கான காரணத்தையும் அவர் விவரித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“2005 ஆம் ஆண்டு ஆகஸட் மாதம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புலிகள் அமைப்பால் படுகொலைசெய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் செல்வதற்கு முன்னர் புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு பணம் வழங்கித்தான் 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுத்து, தேர்தலில் வெற்றிபெற்றனர். எனவே, அந்த மரணத்துக்கும் (முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மரணம்) இதற்குமிடையில் (பணம்கொடுக்கப்பட்ட விவகாரம்) சம்பந்தம் இருக்கிறதா? இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அவரைக் கொலைசெய்தது (கதிர்காமரை) புலிகள்தான் என்று எமக்குத் தெரியும்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர், அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். நாம் பங்கேற்கவில்லை. மேற்படி விடயங்கள் உண்மை ஆணைக்குழு ஊடாக வெளிவந்துவிடும் என அஞ்சுகின்றீர்களா? உங்களுக்கு பயம் இல்லையென்றால் அந்த விசாரணையையும் நடத்திவிடுவோம்.

அதேவேளை, மாவிலாறுவை ஏன் பிடித்தனர் என்று தெரியுமா? மாவிலாறுவை கைப்பற்றிய பின்னர் தப்பிவிடலாம் என முன்னாள் அரசு நினைத்தது. ஆனால், அரசுக்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகின. ஹெல உறுமய உறுப்பினர்கள், படையினர் ஆகியோர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். ரத்தின தேரர் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதனால்தான் யுத்தம் ஆரம்பமானது. மாறாக திட்டமிட்டவாறு திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இதுதான் உண்மையும்கூட.

கிளிநொச்சி விழுந்ததன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்கு புலிகள் முடிவெடுத்தனர். 3 இலட்சம்பேரை பணயக்கைதிகளாக கொண்டு சென்றனர். இவர்கள் இவ்வாறு செய்யாதிருந்திருந்தால் பிரச்சினை உக்கிரமடைந்திருக்காது.

இந்நிலையில் இந்நதியாவிலும் பொதுத்தேர்தல் ஆரம்பமானது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெறும் என்றும், ஜெயலலிதாவுடன் இணைந்து ஆட்சியமைப்பார்கள் என்றும் அஞ்சினார்கள் (மஹிந்த அரசு). இதனால், தேர்தலுக்கு முன்னர் போரை முடித்துவிடுமாறு இங்கிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமையவே இராணுவத்தினர் செயற்பட்டனர். வெள்ளைக்கொடி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். புலிகள் வெள்ளைக்கொடியுடன் வரும்போது நம்பமுடியாதுதான். இவர்களை ஏற்பதா அல்லது இவர்கள் பொய்யாக செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் அங்கிருக்கும் கட்டளை அதிகாரிகளே தீர்மானிக்கவேண்டும்.

இந்த நடைமுறை மாற்றப்பட்டு எதற்காக கொழும்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது? 2005 நவம்பரில் டீல்போட்ட(பேரம்பேசிய) புலித்தேவனைக் காப்பற்ற வேண்டிய தேவை இருந்தது. எதுவாக இருந்தாலும் நாம் உண்மையைக் கதைப்போம். ஜனாதிபதித் தேர்தலின்போது பேரம் பேசியது புலித்தேவன் என்பது தெரியும்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் புரியும். அப்பாவி மக்களைப் பாதுகாக்குமாறு ஐ.நா.சபை வலியுறுத்தியது. ஆனாலும், போர் தொடுக்கப்பட்டது. எனினும், இந்த அணுகுமுறை புலித்தேவனுக்குப் பொருந்தவில்லை. புலித்தேவனைக் காப்பாற்றப்போய்தான் வெள்ளைக்கொடி சர்ச்சையில் சிக்கினீர்கள். டீல் இல்லாவிட்டால் புலித்தேவன் அரச பக்கம் வந்திருக்கமாட்டார்தானே?” – என்றார்.

Related Posts