Ad Widget

இதுவே கடைசியாக இருக்கட்டும் – ஆனந்தசங்கரி

புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரமான, மிருகத்தனமான சம்பவம் எமது நாட்டில் என் ஞாபகத்துக்கு எட்டிய வரையில் நடந்ததும் இல்லை, நான் கேள்விப்பட்டதும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எத்தனையோ ஆசைக் கனவுகளுடன் தமது பிள்ளைகளை சீராட்டி வளர்த்த பெற்றோர்களுக்கு இப்படியான ஒரு முடிவு வருமென கனவிலும் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். வெறும் மன ஆறுதலுக்காக நாம் கூறும் வார்த்தைகள் எந்த விதத்திலும் மாணவி வித்தியாவின் பெற்றோர்களையோ உறவினர்களையோ சாந்தப்படுத்தப் போவதில்லை.

இருந்தாலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது உறவுகள் மத்தியில் தமது பிள்ளைக்கு நடந்த சம்பவமாகவே கருதி ஏற்பட்டிருக்கும் கோபம், ஆதங்கம் மற்றும் அனுதாபங்களை பார்க்கும்போது இவ்வாறான சம்பவம் நடப்பதற்கு இனி எவரும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே தெளிவாகின்றது.

நாம் அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வலுவான சட்டங்களோடு சம்மந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். விரைவாக, விரிவாக விசாரணை செய்யப்பட்டு, இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் எவரையும் தப்பவிடாது, அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி முன்மாதிரியான, கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல பாடசாலை மாணவிகளை, பெற்றோர்கள் இனிமேல் தனியாக அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அயலவர்களிடம் நல்லுறவுகளைப் பேணி தமது பிள்ளைகளை ஒன்றாக சேர்த்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் மாலை நேர வகுப்புகள் மற்றும் மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்யும் போது, பெற்றோர்களுடன் இணைந்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு செய்தால்தான் இத்தகைய கொடியவர்களிடமிருந்து மாணவிகளை பாதுகாக்க முடியும்.

இழக்கக்கூடாதவற்றை எல்லாம் இழந்துவிட்டு, இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கு மத்தியில், இவ்வாறான கயவர்கள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை.

யாழ். குடாநாட்டில் சமீபகாலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்ப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் பகலில் கூட தனியாக நடமாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். இதுவே கடைசியாக இருக்கட்டும், அதுதான் மறைந்த மாணவி வித்தியாவுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts