Ad Widget

இதயசுத்தியுடன் கூடிய அதிகாரப் பங்கீடு வேண்டும் : சம்பந்தன்

நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலக தூதுவர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இலங்கைக்கான அமெரிக்க துதூவர் அதுல் கெசெபின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன் போதே சம்பந்தன் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியதுடன், இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது என்றும், மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அவை அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல, எனவும் ஆனால், சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்காக நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மை ஆதரவைப் பெற்று அதன் பின்னர் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றினூடாக நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டு, நம்பத்தகுந்த விசாரணைகள் மூலம் உண்மைகள் அறியப்பட்டுக் காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஏதாவது வகையில் மன ஆறுதல் அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்த போதும் அந்த சட்டம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை என்பதனையும், தூதுவர் அலிஸின் கவனத்திற்குக் சம்பந்தன் கொண்டுவந்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தூதுவர் அலிஸ், மேற்குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.எ. சுமந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசப் உள்ளிட்ட தூதுவராலய உத்தியோகத்தர்கள் சிலரும் இதன் போது பிரசன்னமாயிருந்தனர்.

Related Posts