Ad Widget

இணையவழி வியாபார முகாமைத்துவ மாணி பட்டகற்கை நெறி- புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறியின் 4வது பிரிவிற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டிருக்கிறது. விண்ணப்ப முடிவுத்திகதி 11.10.2013 ஆகும் இதற்கு விண்ணப்பிக்க http://www.jfn.ac.lk/bbm என்ற இணைய முகவரியில் காணப்படும் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

frontimg

இலங்கையில் உயர் கல்வி அமைச்சின் தேசிய இணைய வழி தொலைதூரக் கல்விச் சேவையின் தொலைதூரக் கல்வி நவீனமயமாக்கல் திட்டம் (Distance Education Modernization Project ( DEMP) of National Online Distance Education Service (NODES) ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி அலகில் முதன் முதலில் தமிழ் மொழி மூலமான இணையவழி வியாபார முகாமைத்துவ கற்கை நெறியை வழங்கி வருகின்றது.

இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் இணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இது உலகிலேயே உள்ள ஒரே ஒரு தமிழ் மொழி மூலமான இணைய வழி முகாமைத்துவ பட்டக்கற்கை நெறி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கற்கை நெறிக்கு இலங்கையின் எல்லாப்பகுதியில் இருந்தும் க.பொ.த உயர்தரத்தில் எந்தவொரு பாடப்பிரிவிலும் பயின்று 3 பாடங்கள் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விண்ணப்பக்கட்டணம் ரூபா 1000 ஆகும். அனுமதிப்பரீட்சை , நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் முதலாவது பகுதிக்கட்டணத்தினைச் செலுத்தி பதிவினை மேற்கொண்டதன் பின்னர் முதலில் அறிமுக நிகழ்வும் அதனைத்தொடர்ந்து கணினியில் பாடநெறிகளைக் கையாள்வது தொடர்பான (Moodle Learning Management System) ‘மூடில்’ பயிற்சிப்பட்டறையும் இடம்பெறும்.

கற்கை நெறி வருடாந்தம் இரண்டு அரையாண்டுகளைக் கொண்ட மூன்று ஆண்டுகளைக் கொண்டது. முதல் 2 ஆண்டுகளில் ஓவ்வொரு அரையாண்டும் ஐந்து பாடங்கள் வீதமும், இறுதி ஆண்டில் ஓவ்வொரு அரையாண்டும் நான்கு பாடங்கள் வீதமும் மொத்தம் 28 பாடங்களைக் கொண்டது. கற்கைநெறியின் ஒவ்வொரு பாடநெறியும் 20 வாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

ஓவ்வொரு வாரத்திற்குமான அலகுகள் இணையத்தில் Moodle Learning Management System- LMS (http://uoj.nodes.lk) மூலமாக வெளியிடப்படும். வழங்கப்படும் கடவுச்சொற்களைப்பயன்படுத்தி வாராவாரம் மாணவர்கள் தமது கற்கைநெறியைத் தாமாகவே சுயமாகக் கற்க முடியும். சந்தேகங்கள் ஏற்படின் குறிப்பிடப்பட்ட பாடநெறிகளுக்கான விரிவுரையாளர்களுடனோ அல்லது போதானாசிரியர்களுடனோ (Tutors /Mentors) கட்டுப்பாட்டாளர்களுடனோ மின்னஞ்சல் வாயிலாகவும், மற்றும் LMS இல் அறிமுகப்படுத்தப்படும் வழிகளின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும்.

மாணவர்கள் தங்கள் பகுதியில் செயற்படும் Nodes Access Centers ஊடாக இணைய வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். பரீட்சைகள் நேரடியாகவே நடாத்தப்படும் காலத்திற்குக்காலம் சுய மதிப்பீட்டு ஒப்படைகள் அல்லது பரீட்சைகள் இணையத்தில் இடம்பெறும்.

மொத்தப்புள்ளியில் இணையவழி செயற்பாடுகளுக்கான புள்ளி 30% மாகும். மிகுதி 70 % மான புள்ளியை மாணவர் அரையாண்டு தோறும் இடம்பெறும் இறுதிப் பரீட்சை மூலம் பெற்றுக்கொள்வர். தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அனைவரும் மின்னஞ்சல் முகவரியைப் பேணிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.

இக் கற்கை நெறிக்கான காலம் மூன்று வருடங்கள் ஆகும். இதனை மாணவர்கள் ஆகக்குறைந்தது 7 வருடங்களிற்குள் பூர்த்தி செய்தல் வேண்டும். மொத்தமாக 150,000 ரூபா இதற்கு செலவாகும். இதனை முதலாம் ஆண்டு ரூ90,000, இரண்டாம் ஆண்டு ரூ30,000, 3ம் ஆண்டு ரூ30,000 என பகுதியாக செலுத்தலாம்.

இக்கற்கைநெறியில் பட்டம் பெற முடியாதவர்கள் முதல் வருடத்தினை பூர்த்தி செய்து விலகும் போது சான்றிழையும் இரண்டாவது வருடத்தினை பூர்த்திசெய்து விலகும் போது டிப்ளோமாவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்;. இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு http://www.jfn.ac.lk/bbm என்ற இணைய முகவரியை அணுகவும்.

Related Posts