Ad Widget

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு மணல் காட்டில் அஞ்சலி

வடமராட்சி கிழக்கு மணல்காட்டு பகுதியில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை 8மணியளவில் இடம்பெற்றது.

sunami-manarkkadu

மணல்காட்டுப் பகுதியில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர்நீத்த 72 உறவுகளுக்கு அவர்களை விதைத்த இடங்களில் அவர்களுடைய உறவினர்களால் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் அங்கு 72 பேரின் பெயர்களும் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மலரஞ்சலி செலுத்தியதுடன் சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மணற்காட்டு பங்குத்தந்தை எல்.மோ அருள்நேசன், கரவெட்டி பங்குத்தந்தை எமில்போல்ட், சக்கோட்டை பங்குத்தந்தை நிரூபன் நிசாந், அருட்சகோதரி நேவிஸ் ஆகியோருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை மணல்காட்டில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு ஆத்ம சாந்தி வழிபாடுகளும் இடம்பெற்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுமாத்திராத்தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதுடன் இலட்சக்கணக்கிலான மக்களது உயிரையும் காவு கொண்டது. குறித்த அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 9ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் நினைவுத்தூபிகளுக்கும் விதைக்கப்பட்ட இடங்களிலும் அவர்களது உறவுகள் உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தவும் உள்ளனர்.

இதேவேளை ஆழிப்பேரையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இன்று காலை 9.25மணி முதல் 9.27 மணிவரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர்முகாமைத்துவப்பிரிவு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts