Ad Widget

ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக மீளப்பெற வேண்டும்

வட மாகாண சபையையும், வட மாகாண முதலமைச்சரையும், அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள இணைப்பாட்சி முறையையும் விமர்சித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

”வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும், வட மாகாணத்தை மயான பூமியாக காண முயற்சிக்கின்றனர் என, பாரதூரமான குற்றச்சாட்டை வடக்கு ஆளுநர் முன்வைத்துள்ளார். வட மாகாண சபையோடு, அதன் நிர்வாகத்தோடு இணைந்து செயற்படும் ஆளுநர், வட மாகாண சபையையும் வடக்கு முதல்வரையும் எந்த வகையிலும் விமர்சிக்க முடியாது. அவ்வாறு செய்வதானது, அவரது அரசியல் சாசன ரீதியான கடமைகள் மற்றும் அதிகாரத்தை மீறுவதாக அமையும்.

மாகாண சபையை பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். இன்று எமக்கென மிஞ்சியிருப்பது மாகாண சபை மட்டும்தான். இவ்வாறு இருக்கையில் வடக்கு மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக வடக்கு ஆளுநரே விமர்சித்துள்ளமை பாரதூரமான விடயம். இவர் தொடர்ந்தும் இந்த பதவியில் நீடிக்க முடியாது.

அவர் ஆளுநராக வரும்போது, வடக்கு முதல்வர் அவரை ஆதரித்து வரவேற்றார். ஆனால், இன்று அவர் வடக்கு முதல்வர் மற்றும் வடக்கு மக்களின் முதுகில் குத்தியுள்ளார். அவரை ஜனாதிபதி மைத்திரி உடன் மீளப்பெற வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அரசியல் யாப்பின் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இல்லாவிட்டால், ஆளுநர் தமது பதவியை இராஜினாமா செய்யவேண்டுமென பகிரங்கமாக அறிவிப்பு விடுக்கிறோம்” என்றார்.

Related Posts