Ad Widget

ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை – முதலமைச்சர்

vickneswaranவட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர வேண்டும் என நாங்களும் மக்களும் விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார். இதனை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து செயற்படுவார் என தான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“வட மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இடம்பெற இனிமேல் அனுமதிக்க முடியாது. அத்துடன் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வினை விரைவில் காணவுள்ளது.

போரிற்கு பிந்திய வடக்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச சமூகம் வட பகுதி தமிழ் மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.

வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தேர்தல் ஆணையாளரை அரசாங்கம் வழிநடத்த வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் ஓட்டைகள் நிறைந்த பாத்திரம் போல இருக்கின்றதை உணர்ந்திருந்த போதும், நாங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம்.இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts