Ad Widget

ஆறு மாதங்களுக்குள் 23 பாடசாலை மாணவர்களுக்குத் தொற்றியது எயிட்ஸ்!

இலங்கையில் கடந்த ஆறுமாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக் காலப் பகுதியில் மேலும் 23 மாணவர்களும் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக எயிட்ஸ் சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பாடசாலை மட்டத்தில் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 14 வயதுக்கும் கூடிய பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த தெளிவுபடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நாடு தழுவிய ரீதியில் இந்த தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டம் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், தாதியர் உள்ளிட்ட பலரும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று மாணவர்களை தெளிவுபடுத்தவுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று தாக்கிய 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் சிசிர லியனகே சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related Posts