Ad Widget

ஆறு மாதங்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – கே.என்.டக்ளஸ்

ஒரு தேசிய அரசாங்கம் அமைந்து, சுமார் 6 மாதங்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். மாறாக அது பிற்போடப்பட்டால் அது ஆறிய கஞ்சியாகிவிடும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போதே பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர்கள் அப்போதே தீர்வைப் பெற்றிருக்க வேண்டும்.

சர்வகட்சி மாநாட்டில், சர்வதேச விசாரணை, உள்ளக கலப்பு விசாரணை என்று காலத்தை இழுத்தடிக்காமல், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கண்டறியவும் உண்மையைக் கண்டறியவும், செயற்படவேண்டும். இன நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும்.

புதிய ஆட்சியில் பழிவாங்கல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலரும் புதிய ஆட்சியைப் பயன்படுத்திப் பழிவாங்கல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். ஆயுதப் போராட்டத்தின் போது, பார்வையாளர்களாக இருந்தவர்கள் தற்போது, தேவையில்லாத விடயங்கள் பற்றிக் கதைக்கின்றனர். அவர்கள் கதைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளையும் பாதுகாக்கப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு என்றால் யாருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெறவுள்ளது?

விசாரணை தமிழர்களுக்கு எதிராக நடைபெறவுள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. முன்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் தற்போது, கைது செய்யப்படுகின்றனர். சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன என்றார்.

Related Posts