Ad Widget

ஆறிப்போன காயங்களின் வலி யாழ்ப்பாணத்திலும் லண்டனிலும் அறிமுகம்

எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ltte-book

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையாற்றுவர்.

ஏற்புரையை நூலாசிரியர் வெற்றிச்செல்வி வழங்குவார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்க்கை பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

இந்த நூல் அண்மையில் மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் ஆசிரியை தனலெட்சுமி கிறிஸ்துராஜன் தலைமையில் வெளியிடப்பட்டது.

‘எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெண்ணின் பார்வையில் பிறக்கும் எழுத்து தனித்துவமானது’ என்ற மகுட வாசகத்துடன் நான்கு பெண்களின் எழுத்துக்களை முன்வைத்து பெண்களால் நடத்தப்படும் அறிமுகக் கலந்துரையாடலில் வெற்றிச்செல்வியின் ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடல் 9 ஆம் திகதி சனிக்கிழமை லண்டனில் உள்ள ரினிற்றி சென்ரரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இலங்கை அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’, நைஜீரியாவைச் சேர்ந்த சிமாமந்தா எங்கோசி அடிச்சியின் ‘ஊதாநிறச் செம்பருத்தி’, இந்தியாவைச் சேர்ந்த கமலாதாஸின் ‘என் கதை’, தமிழகத்தைச் சேர்ந்த சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ ஆகிய நான்கு நூல்கள் பற்றி இந்த லண்டன் நிகழ்வில் கருத்துரைகள் வழங்கப்படவுள்ளன.

நவரட்னராணி சிவலிங்கத்தின் வழிநடத்துதலில் சந்திரா இரவீந்திரன், கௌரி பரா, மீனா நித்தியானந்தன், நவஜோதி யோகரட்னம் ஆகியோர் இங்கு கருத்துரையாற்றவுள்ளனர்.

Related Posts