மானிப்பாய் பொன்னாலை வீதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீடு புகுந்த இனம்தெரியாத குழுவினர் வாள் முனையில் 19 வயது யுவதியினை கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பொன்னாலை வீதியில் உள்ள வீட்டிற்குள் இரவு 9 மணியளவில் ஓர் கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குழு ஒன்று முகத்தினை துணியால் கட்டியவாறு வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்துள்ளனர்.
இவ்வாறு இளையர்கள் சிலர் வாள்களுடன் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த வீட்டார் கூக்குரல் எழுப்பியவேளையில் வெட்டிவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். இதனால் வீட்டார் தப்பியோட முயன்றுள்ளனர். இருப்பினும் அதிக இளையர்கள் இருப்பதனால் அம் முயற்ணியும் பலிக்கவில்லை.
இதேநேரம் குறித்த நேரம் வீட்டில் நின்ற 19 வயதுப் பெண் தப்பியோட முயன்றுள்ளார். அவ்வாறு ஒட முயன்றவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் உடனடியாக தொலைபேசி மேலம் மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் மானிப்பாய் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் இனம் தெரியாத சிலரே வீடு புகுந்து மகளை கடத்திச் சென்றதாகவும் தற்போதுவரை மகளை கடத்தியதும் யார் எனத் தெரியாது என முறையிட்டுள்ளார். மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.