Ad Widget

ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் பெற்றுக்கொண்டவைகளை விட இழந்துகொண்டவைகளே அதிகம் – வடக்கு மாகாண சபை எதிர்கட்சித்தலைவர் கமலேந்திரன்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் இன்றைய தினம் (25) வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் ஆற்றிய கன்னிஉரை.

எண்ணி முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணவேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
என்றுரைத்தான் பாரதி!

கௌரவ அவைத்தலைவர் அவர்களே!

உருண்டு கொண்டிருக்கும் இப்ப+மிப்பந்தில் பிறந்து கொண்டிருக்கும் உயிர்களிடத்திலும் ஏனைய காரணிகளிடத்திலும் �மாற்றம் ஒன்றே மாறாதது|| என்ற இயங்கியல் தத்துவம் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டமும் பல மாற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்தித்தே வந்துள்ளது.

நெருக்கடிகள் மிகுந்த கால கட்டங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை மாற்றி அமைத்து வரும் எமது தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உறுதிமிக்க கொள்கைகளுக்காகவும் எமது மக்களின் விடிவுக்காகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் இறுதிவரை போராடி வீழ்ந்த எமதருமைத் தோழர்களின் கனவுகள் நனவாகிய இந்நாளில் நான் அவர்களையும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், அரசியல் உரிமையுடனான வாழ்வுக்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்த அத்தனை போராளிகளையும், தமிழ் இன விடுதலைப் பயணத்தில் பலியாகிப்போன எமது மக்களையும் நினைவில் கொண்டு எனது கன்னியுரையை நிகழ்த்துவதில் பெருமையும் புளகாங்கிதமும் அடைகின்றேன்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்த தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் இருந்தவற்றை இழந்தோம், எதையும் பெறவில்லை. பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களின் தலைவர்கள் என்று கூறியோர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும், அதன் பலனாக கிடைக்கப் பெற்ற மாகாண சபை முறைமையையும் ஒரு பொன்னான வாய்ப்பாகவே கூறிவந்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு, மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதை முதல் கட்டமாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை கட்டம் கட்டமாக நகர்த்தி தீர்வு நோக்கி முன்னேற முடியும் என்றும் நாம் வலியுறுத்தி வந்துள்ளோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்த வாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்ட வடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651 ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாக�இலட்சங்களாக கூடியிருக்காது. இரத்த ஆறு எமது தாயக மண்ணில் ஓடியிருக்காது. ஈடு செய்யமுடியாத இழப்புக்கள் இங்கே நிகழ்ந்திருக்காது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணமாகவும், பொலிஸ், காணி அதிகாரங்களும், இந்திய அரசின் பக்க பலமும், இந்தியாவின் உயர்தரமான உதவியும் தமிழ் மக்களுக்கு கிடைத்தது அது எமது போராட்ட வரலாற்றின் பொற்காலமாகும். அதைப் புலிகள் தூக்கி எறிந்தார்கள், பொறுப்பெடுத்தவர்கள் துஸ்பிரயோகம் செய்தார்கள். அதுவே தமிழ் மக்களின் வரலாற்றை புரட்டிப்போட்டுவிட்டது. பல பின்னடைவுகளையும், ஈடு செய்ய முடியாத இழப்புக்களையும் தமிழ் மக்கள் மீது சுமத்திவிட்ட வரலாற்றுத் தவறாக அமைந்தது.

அன்று முதல் மாகாண சபை முறைமையை தீண்டத்தகாததாக பலர் கூறினார்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மாகாண சபையிலிருந்து நாம் உரிமை இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளோம். எமது நிலைப்பாட்டை மாறி மாறி வந்த இலங்கை ஜனாதிபதிகளிடமும், சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியும் வந்துள்ளோம்.

எமது நடைமுறை யதார்த்த அரசியல் பயணத்தில் பல தோழர்களையும், எம்மோடு தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறந்த புத்திஜீவிகளையும் இழந்துள்ளோம். அவர்களின் தியாகமும், எமது நம்பிக்கை மிகுந்த போராட்டமும் இன்று நனவாகியுள்ளது.

கௌரவ அவைத்தலைவர் அவர்களே!

23 வருட தியாகப் பயணம்! இதுவரை நாம்பெற்றுக் கொண்ட வெற்றிகளை எமது மக்களுக்காக உச்ச பயன் நோக்கி பிரயோகித்ததோடு பல் கட்சி ஜனநாயகம் எமது மண்ணில் மலர்வதற்கு உழைத்தவர்கள் நாங்கள்.

இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகமும் அரசியல் முயற்சிகளும் எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தராது என்று கூறியவர்கள், தமிழ் இனம் பல்வகைப்பட்ட பொருளிழப்புக்கள் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட இன்னோரன்ன இழப்புக்களை சந்தித்து இன்று அரசியல் அநாதைகளாக்கப்பட்ட பின்னர் அரசியல் பயணத்தில் நம்பிக்கை கொண்டு மாகாணசபை முறையை ஏற்று இன்று அதன் நிர்வாகத்தில் பங்கெடுத்திருப்பதைப் பார்த்து நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்

நாம் எப்போதோ கூறியதை இன்று நீங்கள் புரிந்து கொள்வதற்காக ஈடு செய்ய முடியாத இழப்புக்களை விலையாகக் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள்தான். தமிழ் மக்களின் இழப்புக்களும், எமது தாயக நிலத்தில் இரத்த ஆறு ஓடுவதற்கும் காரணமாக இருந்தவர்களே அதற்கான பரிகாரத்தையும் காண வேண்டிய கட்டாயத்தை வரலாறு உணர்த்தியுள்ளது.

இந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றில் எனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் இந்த மாகாணசபை ஊடான ஆட்சியும் ஆளுமையும் எமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு வித்திடும் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அத்தகைய பயனுள்ள திட்டங்களை ஆதரித்து தமிழ் மக்கள் பயன்பெறச் செய்யவேண்டும் என்ற பெரு விருப்பத்தைச் சுமந்தவாறே உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு.

இதுவரை நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கான முன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும், சமூகத்தில் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ் இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீது சுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டிய நிலையில் நாம் நம்மிடையே உள்ள அனைத்து வகையான பேதங்களையும் மறந்து நமது மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கின்றேன்.

இறுதி யுத்தத்தில் நாம் இழந்து போன எம் உறவுகளை கண்ணீருடன் நினைவு கூரும் இந்த வேளையில் யுத்தத்தினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல் உள நலன் சார்ந்த வழிகாட்டுதல்கள், சிகிச்சைமுறைகள், நலனோம்பும் செயற்பாடுகளை எமது சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

யுத்தங்கள், இயற்கை அனர்த்தங்களால்; காவு கொள்ளப்பட்ட உலக நாடுகள் பல அந்தந்த நாட்டு மக்களினதும் அரசாளும் தலைவர்களினதும் ஒன்றிணைந்த செயற்பாடுகளால் மீளக் கட்டியெழுப்பப்பட்ட வரலாறுகள் நாம் அறியாதவையல்ல.

இந்த நாடுகள் எல்லாம் நமக்கான முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன.
இந்த நாடுகளைப் பின்பற்றி இயற்கை வளம் செழித்த எம் பிரதேசங்களில் கைத்தொழில், விவசாயம், என்பவற்றை ஊக்குவித்து மக்களுக்கு வருமானத்தையும் வேலைவாய்ப்புக்களையும் உள்வாங்கும் நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், உள்ளுர் உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் பெருக்கவும், உற்பத்தித் தொழில்பேட்டைகளை நிறுவி ஏற்றுமதி தொழில் வாய்ப்பை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும் நாம் முன்னின்று உழைக்கவேண்டும்.

எமது மக்கள் தமது தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் ஊடாக இலகு கடன்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களது நடைமுறை வாழ்வுக்கான தொழிற்துறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம். இந்த வழிகள் நம் மக்களை சுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும்.

கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். யுத்தத்தினால் நம்சிறார்கள் பலர் தம் கல்வியை முறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதார காரணங்களினாலும், யுத்தம் ஏற்படுத்திய இழப்புகள் காரணத்தினாலும் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள்.

கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கான மூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கான ஆயத்தநிலைகளை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

கௌரவ அவைத்தலைவர் அவர்களே!

ஆயுதப் போராட்ட வரலாற்றினால் நாம் பெற்றுக்கொண்டவைகளை விட இழந்துகொண்டவைகளே அதிகம். இந்த இழப்புக்களின் ரணங்கள் இன்னும் ஆறாத வடுக்களாக நம் மக்களின் மனதில் நிலைகொண்டுள்ளது. அந்த இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் முழுமையான பரிகாரங்களை எவராலும் காணமுடியாது. ஆனால் எமது நாளைய சந்ததியினர் அரசியல் உரிமையுடனும், பாதுகாப்புடனும் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதுதான் கைமாறாக இருக்கமுடியும், மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய சத்திப்பிரமாணமும், நம்பிக்கையுடனான வெளிப்பாடும் எமக்கு நம்பிக்கையை தந்துள்ளது.

அதற்காக நிரந்தரமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்துக்கு மாகாண சபையை நாம் முன் நகர்த்திச் செல்ல வேண்டும். இந்த முயற்சியில் சகோதர முஸ்லிம் மக்களோடு இணக்கப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களிடமும் எமது உரிமை கோரிக்கையின் நியாயங்களை தெளிவுபடுத்த நாம் உழைக்க வேண்டும்.

இலங்கை அரசுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்துமாறே வலியுறுத்தி வருகின்றன.

அல்லது இச்சபையை பெற்றுள்ள ஆளும்தரப்பினர் தேர்தல் வேளையில்; சர்வதேச சமூகத்தினரையும் அழைத்து வந்து தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களிடம் வாக்குறுதியை வழங்கியிருந்தனர் அதற்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்ட ஆணையை தமிழ் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். எனவே தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றவேண்டும் என்றும் தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலாக எனது குரல் இந்தச் சபையில் என்றும் ஒலிக்கும். எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலோடும், தமிழ் மக்கள் வழங்கியிருக்கும் பொறுப்பை உணர்ந்து கொண்டும், மாகாண சபையைப் பாதுகாத்து, பலப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே எனது தலையாய பணியாக இருக்கும் என்றும் கூறிக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Related Posts