Ad Widget

சலசலப்பை ஏற்படுத்திய சம்பந்தன் உரையின் முழுவடிவம்!

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த உரையில் சம்பந்தன் எம்.பி. உண்மையில் என்ன கூறியிருந்தார்..? அவரது முழு உரையின், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு வருமாறு…

பல தாசாப்தங்களாக வடக்கு, கிழக்கைச் சீரழித்த யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. யுத்தத்தை தள்ளிவைத்துவிட்டு தங்கள் வாழ்வை மேம்படுத்த தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஆயுதப்படைகள் வடக்கு, கிழக்குக்கு வெளியேதான் இருக்கவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றர்கள் என்ற தவறான எண்ணக்கருத்து இந்த நாட்டில் சிலருக்கு இருப்பதாகவே தோன்றுகின்றது. அது சரியானதல்ல. இந்த முழு நாட்டிலும் இருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஆயுதப் படைகளின் பிரசன்னம் இருக்கலாம் என்பதை நாம் உணர்ந்து ஏற்றுள்ளோம். அதனைப் பதிவு செய்ய நான் விரும்புகிறேன். தமிழ் மக்களை கீழ்மைப்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்கள் தாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான பிரஜைகள் அல்லர் என உணரும் வகையிலோ அல்லது அவர்கள் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரஜைகள் என வெதும்பும் முறையிலோ அங்கு ஆயுதப் படைகளின் பிரசன்னம் இருக்கக்கூடாது என்பதையே நாம் கோருகின்றோம். அத்தகைய வகையில் படைகளின் பிரசன்னம் இருப்பதை நாம் விரும்பவில்லை.

தமிழர்களாகிய நாங்கள் வடக்கு, கிழக்கில் சுயகௌரவத்துடனும் மரியாதையுடனும் வாழ, அதேசமயம் ஆயுதப்படையினரும் தேவைப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் – நியாயமான, அவசியமான எண்ணிக்கையில் – வடக்கு, கிழக்கில் பிரசன்னமாகவிருந்து தங்கள் வேலைகளைச் செய்யவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் போராட்டத்தின் வரலாறு குறித்து நான் பேசவேண்டி உள்ளது. தமிழர் போராட்டம் சுதந்திரத்துக்குச் சற்றுப் பின்னர் தொடங்கியது. அதற்கு நீண்ட சரித்திரம் உண்டு. அது உருவானதற்குப் பல காரணங்கள், ஆதங்கங்கள் உள்ளன. அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, அமரர் டட்லி சேனநாயக்க போன்ற இந்த நாட்டின் உயர்ந்த தலைவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நியாயமான ஆதங்கங்கள் காரணமாகவே அது தொடங்கியது. பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு இருந்தது. டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு இருந்தது. அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் நாடு இன்று இந்த நிலையில் இருந்திருக்காது. நாங்கள் எப்போதுமே வன்முறையாளர்கள் அல்லர். நியாயமான, சட்டரீதியான, ஜனநாயக, அறவழி அரசியல் போராட்டங்களையே நாம் முன்னெடுத்தோம். நாம் சத்தியாக்கிரகத்தைக் கைக்கொண்டோம். அஹிம்சையைப் பின்பற்றினோம். நாங்கள் அதனை எல்லாம் மேற்கொண்டபோது வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது 1956இல் நடந்தது, 1958இல் நடந்தது, 1961இல் நடந்தது, 1977இல் நடந்தது, 1981இல் நடந்தது. 1983இல் தமிழர் இனவழிப்புத் திட்டமே முன்னெடுக்கப்பட்டது. இவை சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விடயங்கள். பிரிக்கப்படாத, ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நியாயமான அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். எமது தலைவர் செல்வநாயகம் இந்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்து எந்தக் கேள்விக்கும் இடமில்லை. இந்த விடயம் குறித்து யாரும் மறுத்துக்கூற முடியாது. அதுதான் எமது போராட்ட சரித்திரம். ஆகையால் ஜனநாயக வழியில், அஹிம்சை நெறியில் முன்னெடுக்கப்பட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு உரிய இடமளிக்க மறுத்து, தமிழர் விரோத நடவடிக்கைத் திட்டங்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்த பின்புலச் சூழ்நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானது. எல்.ரி.ரி.ஈ. உருவானதற்கான உண்மையான சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்.ரி.ரி.ஈ. தமிழர்களால் உரு வாக்கப்பட்டதல்ல. நியாயமான அபிலாஷைகளுக்கு இடமளிக்க மறுத்து வந்த தொடர்ச்சியான அரசுகளாலேயே எல்.ரி.ரி.ஈ. உருவாக்கப்பட்டது என்பதே எப்போதும் எனது கருத்து நிலைப்பாடாக இருந்து வருகிறது. அதுதான் எல்.ரி.ரி.ஈ. உருவானதற்குக் காரணம். எல்.ரி.ரி.ஈ. தோற்றம்பெற்றமைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அதனை யாரும் மறுக்க முடியாது.

அந்த அமைப்பு, குடிமக்களை – சிங்கள குடிமக்களை, தமிழ் குடிமக்களை, முஸ்லிம் குடிமக்களை – சிவிலியன் தலைவர்களை – தாக்கியபோதே அது பயங்கரவாத அமைப்பு என வர்ணிக்கப்பட்டது. அவர்கள் மனித உரிமைகளை அனுஷ்டிக்கவில்லை; அவர்கள் எப்போதும் ஜனநாயகத்தைப் பின்பற்றவில்லை. அதுதான் அவர்களின் தோல்வி. எல்.ரி.ரி.ஈ.யை அழித்தமைக்கு பலர் உரிமை கோருகின்றனர். ஜனநாயகத்தைப் பின்பற்றாததால் மனித உரிமைகளைப் பின்பற்றாததால் எல்.ரி.ரி.ஈ. தன்னைத் தானே அழித்துக்கொண்டது என நான் கூறுகிறேன். அதுதான் உண்மை.

எனது நண்பரும் அதிகம் மதிக்கப்படும் முன்னாள் எம்.பியுமான லக்ஷ்மன் கதிர்காமரே எல்.ரி.ரி.ஈயைப் பலவீனப்படுத்துவதை உறுதிப்படுத்தி, செயலிழக்கச் செய்யவைத்து, உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள எல்.ரி.ரி.ஈ. கட்டமைப்புக்களை அகற்றச் செய்ததில் முன்னணிப் பங்கு பணியாற்றினார். எல்.ரி.ரி.ஈயை ஸ்ரீலங்கா தோற்கடிப்பதற்கு சர்வதேச ஆதரவு முழு அளவில் கிடைத்தமைக்கு பெருமளவில் அவரே காரணம். லக்ஷ்மன் கதிர்காமர் இன்று உயிருடன் இருப்பாரானால் இன்று நடைபெறும் பல விடயங்கள் குறித்தும் இன்று கூறப்படும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் அவர் அதிகம் வெறுப்படைந்திருப்பார். எனவே நாம் இதனை நினைவில் கொள்ளவேண்டும்.

எனது தலைவர்கள், எனது சொந்த சகாக்கள் எல்.ரி.ரி.ஈயினால் கொல்லப்பட்டனர். நானும் எல்.ரி.ரி.ஈ.யின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருந்தேன். ஏன்? நீங்களோ எங்களை எல்.ரி.ரி.ஈயின் பிரதிநிதிகள் என்று அழைக்கின்றீர்கள். புலிகளால் கொல்லப்படவேண்டியவர்களாக நாங்கள் இருந்தமையால்தானா நீங்கள் எங்களை எல்.ரி.ரி.ஈ.யினரின் பதிலி (பிரதிநிதிகள்) என்று அழைக்கின்றீர்கள்? எல்.ரி.ரி.ஈயின் கொலைப்பட்டியலில் நாங்கள் இடம்பெற்றிருந்த காரணத்தினால் தான் நீங்கள் எங்களை எல்.ரி.ரி.ஈயின் பிரதிநிதிகள் என அழைக்கின்றீர்கள்? அவர்கள் யுத்தநிறுத்தத்துக்கு முன்வந்து பேச்சு நடவடிக்கைகளுக்குள் நுழைந்தபோது பிணக்கிற்கு அரசியல் ரீதியான அமைதித் தீர்வு ஏற்படுவதற்காக எல்லோரும் அவர்களோடு சேர்ந்து பணியாற்றவேண்டியிருந்தமை இயல்பானதே. இப்போது எல்.ரி.ரி.ஈ. இல்லை. எல்.ரி.ரி.ஈ. அகற்றப்பட்டுவிட்டது. போய்விட்டது. ஆனால், சிலர் தமிழர் பிரச்சினையும் அத்தோடு போய்விட்டதாக கருதுகின்றார்கள். தமிழர் பிரச்சினை அப்படிப் போய்விடமாட்டாது. தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான, சாத்தியமான, ஏற்றுக்கொள்ளத்தக்க, நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரை தமிழர் பிரச்சினை இருந்தே தீரும். புலிகளின் மறைவின் பெறுபேறாக தமிழர் பிரச்சினை மேலும் அறவலிமையையும் விசாலமான சட்டபூர்வ நியாயத்தையும் பெற்றமையே விளைவு. தமிழர் பிரச்சினை வெறுமனே அகன்றுவிடாது.

நான் மற்றொரு விடயத்தைக் குறிப்பிட விழைகிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நினைவு தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு உள்ளது? இந்த வருடம் நவம்பர் 27ஆம் திகதி, இறைவன் முருகனுக்கு இந்துக்கள் தீபமேற்றி வணங்கும் மத தினமாகவும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. கார்த்திகைத் தீபம் ஒரு மேன்மையான பண்டிகை. அது, எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கான நினைவு தினமாகவும் கூட இம்முறை அமைந்துவிட்டது. ஒரு சகோதரன் – உயிரிழந்த தனது சோதரனுக்காக தீபமேற்றுவதில் என்ன தவறு உண்டு? ஒரு தாய் – இறந்த தனது மகனுக்காக அல்லது ஒரு தமிழ்ப்பெண் – இறந்த தனது கணவனுக்காக விளக்கேற்றுவதில் என்ன தவறு உள்ளது? ஜே.வி.பி. தங்களது நினைவுதின நிகழ்வை அனுஷ்டிக்கிறார்கள். அது குறித்து யாரும் முறைப்பாடு செய்ததில்லை; எதுவும் செய்யப்படுவதுமில்லை. அதையே நாங்களும் ஏன் செய்ய முடிவதில்லை? அது எமது அடிப்படை உரிமை இல்லையா? அது உலகம் முழுவதும் நடக்கின்றது. நல்ல நோக்கத்துக்காகவோ அல்லது தவறான நோக்கத்துக்காகவோ – நல்ல காரணத்துக்காகவோ – அல்லது தவறான காரணத்துக்காகவோ எதற்காகவாயினும் தங்கள் உயிரை அர்ப்பணித்துத் தியாகம் செய்தவர்களுக்காக அப்படிச் செய்வது உலகின் எல்லா நாடுகளிலும் நடக்கின்றது. அது மக்களுக்கே உரித்தான அடிப்படை உரிமை. அதைத் தடுக்கக் கூடாது. அதுவும் முக்கியமாக பலாத்காரம் மூலம் தடுத்து நிறுத்தக்கூடாது.

யாழ். மாணவர்கள் தொடர்பில் தேவையற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்து வேதனையடைகிறேன். காவலுக்கு எடுக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட எஞ்சிய மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அறிகிறேன். அங்கு வன்முறைகள் இடம்பெற்றிருக்காதபோது – அங்கு ஆயுதங்கள் இல்லாதபோது – அங்கு யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்காதபோது – பல்கலைக்கழக வளாகத்துக்குள் நவம்பர் 27ஆம் திகதி இராணுவம் நுழைந்தே இருக்கக் கூடாது என்பதுதான் எனது வலிமையான வாதமாகும்.

அவர்கள் சில தீபங்களை ஏற்றவிருந்தார்களாயின் – தங்களின் மறைந்த சோதரர்களுக்காக அமைதி பேணி, வணக்கம் செலுத்தவிருந்தார்களாயின் அப்படிச் செய்வதற்கான உரித்து அவர்கள் இருக்கும் போது – அத்துடன் இறைவன் முருகனுக்கு தீபமேற்றி வணங்கும் கார்த்திகைத் தீபத் திருநாளாகவும் அது அமைந்துவிட்ட சந்தர்ப்பத்தில் – இராணுவம் தவறிழைத்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மிகச்சரியான, சட்டப்படியான நடவடிக்கையில் இது அநாவசியமான நுழைவு, தேவையற்ற தலையீடு. அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது விடுதிகள் சேதமாக்கப்பட்டன. அவர்களது சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. அடுத்தநாள் அவர்களில் நால்வர் காவலுக்கு எடுக்கப்பட்டனர். மூவர் இன்னும் தடுப்பில் உள்ளனர். இந்த விடயத்தை மிகக் கவனமாகக் கையாளும்படி நான் அரசை வற்புறுத்திக் கோருகின்றேன். நாங்கள் மோதலை விரும்பவில்லை. அத்தகைய நிலை இந்நாட்டில் கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விடயத்தை உடன் கவனித்து, காவலில் உள்ள மாணவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நாம் அரசைக் கோருகின்றோம்.

நாங்கள் பிறந்து வாழ்ந்த எமது பிரதேசத்தில் நாங்கள் சுயகௌரவத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கு இடையூறாக வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள ஆயுதப்படையினரின் செயற்பாடுகள் அமைந்திருப்பது குறித்து நாங்கள் கவலையடைந்திருக்கிறோம் என்பது உண்மை. நாங்கள் இராணுவ மயப்படுத்தலை நீக்குமாறு கோருகிறோமே தவிர இராணுவ வெளியேற்றத்தை அல்ல. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி இலங்கை இராணுவத்தில் உள்ள மொத்தம் 20 டிவிஷன் படையணிகளில் 15 டிவிஷன்கள் வடக்கிலும், இரண்டு டிவிஷன்கள் கிழக்கிலும், ஏனைய மூன்று டிவிஷன்கள் நாட்டின் எஞ்சிய பகுதியிலும் உள்ளன. வடக்கில் 15 டிவிஷன்கள் இருக்குமானால் அதன் அர்த்தம் வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் வீரர்கள் உள்ளனர். என எனக்குக் கூறப்படுகின்றது. ஏறத்தாழ 6 லட்சம் மக்கள் வடக்கு மாகாணப் பிரதேசத்தில் உள்ள நிலையில் சிப்பாய்களின் இந்த எண்ணிக்கை மிகமிக அதிகமாகும் இதன் அர்த்தம் ஒவ்வொரு நான்கு சிவிலியனுக்கும் அங்கு ஒரு சிப்பாய் உள்ளார் என்பதாகும். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இராணுவம் ஏனைய விடயங்களிலும் தலையீடு செய்கின்றது. உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் முதலாவது கூட்டம் நடைபெற்றபோது கூட்டத்துக்காக பாடசாலைக் கட்டடத்தில் கூடியிருந்தவர்களை ஆயுதப்படைகள் நுழைந்து தாங்கி கூட்டத்தைக் குழப்பின. உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்புக்கு முதல்நாள், குறிப்பாக வன்னியில் – கிளிநொச்சி, முல்லைத்தீவில் – அவர்கள் பலவிடங்களுக்கும் சென்று மக்களின் வாக்காளர் அட்டை மற்றும் அடையாள அட்டைகளைப் பறித்துச்சென்றனர். நான் இது குறித்து தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டியிருந்ததுடன் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றபோதும் அந்த விடயத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தமது பங்களிப்பைக் காட்டினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பணியாற்றியவர்களை அவர்கள் அச்சுறுத்தினர். அப்படிப் பணியாற்ற வேண்டாம் என அவர்களுக்குக் கூறப்பட்டது. “நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக வேலைசெய்தால் தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி நேரும்” – என அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அச்சமடைந்தனர். அவர்களால் தேர்தலில் சுயாதீனமாகப் பங்குபற்ற முடியவில்லை.

இராணுவத்தின் அத்தகைய செயற்பாடுகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம். குறிப்பாக வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் இராணுவம் பரந்த நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. அங்கு பதற்றம் கட்டியெழுப்பப்படுவதை நாம் விரும்பவில்லை. நாம் சாதாரண நிலைமையில் வாழ்வதையே விரும்புகின்றோம். எங்கள் பிரதேசத்தில் குழப்பங்கள் ஏற்படுவதை நாம் வரவேற்கவில்லை. நாம் ஆயுதப்படைகளுடன் மோதலை விரும்பவில்லை. நாம் அமைதியான வாழ்வையே வேண்டுகிறோம். அவர்கள் அப்படி அதிக எண்ணிக்கையில் நிலைகொள்வதை நாம் விரும்பவில்லை. ஏனெனில் அப்படி அதிக எண்ணிக்கையில் அவர்கள் இருப்பது அடக்குமுறையே. அத்தகைய பிரசன்னம் எம்மை இழிவுபடுத்துவதாகும். அவர்களது அதீத பிரசன்னம் எமது சுயமரியாதையிலும் கௌரவத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது சமத்துவமின்மையை உருவாக்கும். அது எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கும் – அதனையே நாம் விரும்பவில்லை.

எமது மக்கள் வலிகாமத்தில் மீளக்குடியமர முடியாதுள்ளனர். எமது மக்கள் சம்பூரில் மீளக்குடியமர முடியாதுள்ளனர். ஆனால் வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்கள் மீளக் குடியமரமுடியும் என அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. முல்லைத்தீவு – கோப்பாப்புலவு மக்கள் அங்குள்ள தமது நிலங்களில் குடியமர முடியாத நிலையில் வெகுதொலைவில் உள்ள கோம்பாவில் என்ற இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்னர். யாழ்ப்பாணத்தில் இன்னும் 551 வீடுகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் 308 முகாம்கள் உள்ளன. வடக்கில் 153 கிராம சேவையாளர் பிரிவுகளில் இராணுவ முகாம்கள் உள்ளன. இதைத்தான் அளவுக்கு மீறிய பிரசன்னம் என நாம் முறையிடுகிறோம். அவர்கள் அங்கே இருக்கவே கூடாது என நாம் கூறவில்லை. குறிப்பிட்ட முகாம்களில் அவர்கள் இருக்கலாம். யுத்தத்துக்கு முந்திய காலம் போல தமது பணிகளை அவர்கள் இப்போதும் செய்யலாம். தங்களது புலனாய்வைப் பேணலாம். தங்கள் கண்காணிப்பைத் தொடரலாம். அந்த விடயங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அது அவர்கள் கடமை. எமது மக்களின் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் – எங்கள் மக்கள் இந்த நாட்டில் தாங்கள் தாழ்ந்த நிலை மக்கள், சமத்துவான பிரஜைகள் அல்லர் என்று அவர்களே உணரும் நிலைமையை உருவாக்கும் விதத்தில் – இராணுவப் பிரசன்னம் இருப்பதையே நாம் விரும்பவில்லை; வரவேற்கவில்லை.

இரணைமடுக் குளத்துக்கு மேற்கே “ஏ-9” நெடுஞ்சாலைக்கு கிழக்கே 4 ஆயிரத்து 600 ஹெக்டரில் ஏறத்தாழ 12 ஆயிரம் ஏக்கர் காணியில் இராணுவத்துக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இது இராணுவ முகாம்களுக்குள் இருக்கும் வழமையான நிலைக்கு முற்றிலும் வித்தியாசமான செயற்பாடு. இராணுவத்துக்காக பத்தாயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இது ஒரு மாபெரும் வீடமைப்புத் திட்டம். அவர்களில் மிகப் பெரும்பாலானோர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சிப்பாய்களாக இருக்கப் போகின்றார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து குடியமரப்போகிறார்கள். (குறுக்கீடு) என்னைக் குழப்பாதீர்கள். நீங்கள் பிறகு பேசுங்கள். நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். அவர்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப்போகிறார்கள். அவர்கள் நிரந்தரமான வாக்காளர்களாகப் போகின்றார்கள்.

இன ரீதியில் நோக்குகையில் இந்த முழு விடயத்திலும் ஒரு சமநிலை இருப்பது போன்று வெளியே காட்டுவதற்காக அண்மையில் தமிழ் யுவதிகளை இராணுவத்தில் சேர்க்கும் வேலையை ஆயுதப்படைகள் ஆரம்பித்தன. மாதாந்தம் அவர்களுக்கு 35 ஆயிரம் ரூபா செலுத்தப்படும். 118 பெண்கள் அண்மையில் இப்படி சேர்க்கப்பட்டனர் கூறப்பட்டது. “ஸி.எஸ்.டி” எனும் சிவில் பாதுகாப்புப் பிரிவுக்கு மஞ்சளில் “ஸி.எஸ்.டி” என எழுதப்பட்ட கறுப்பு ரி சேர்ட்டுடன் மேலும் சிலர் இப்படிச் சேர்க்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக 2500 பேர் அண்மையில் இப்படிச் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வேதனமாக மாதா மாதம் 18 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்ட போதும் அவர்கள் பெரும்பாலும் இராணுவ முகாம்களில் தொழிலாளர்களாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எங்கள் மக்கள் எதிர்பார்க்கும் பொருளாதார நடவடிக்கை இத்தகையது அல்ல. எங்கள் மக்கள் தங்களின் விவசாயத்தை, மீன்பிடியை ஆரம்பிக்கவே விரும்புகின்றனர். எமது மக்கள் தமது பண்ணைகளை, கால்நடை விவசாயத்தை ஆரம்பிக்கவே விரும்புகின்றார்கள். தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கவே அவாக் கொண்டுள்ளனர். இந்தப் பிரதேசங்களில் என்ன நடைபெற்றிருக்கின்றது? தமிழர்களுக்கு ஏதோ செய்வதுபோல வெளித்தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்களுக்குக் கடப்பாடாக உள்ள சிலரை அழைத்து அவர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்கின்றீர்கள், சிலரை இராணுவத்தில் சேர்க்கின்றீர்கள், சிலரைப் பணிக்கு அமர்த்தி, பெரும்பாலும் உங்களின் சொந்தத் தேவைகளுக்கும் இராணுவத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் பயன்படுத்துகின்றீர்கள். இரணைமடுவில் 25 ஏக்கர் நிலத்தில் இராணுவம் மரக்கறி செய்கை பண்ணியுள்ளது. தேராவிலில் 150 ஏக்கர் நிலத்தில் பழவகைப் பயிர்ச்செய்கையை இராணுவம் முன்னெடுத்துள்ளது. வெள்ளாங்குளத்தில் 600 ஏக்கரில் இராணுவம் முந்திரிகை செய்துள்ளது. முக்கோம்புவில் 100 ஏக்கர் நிலத்தில் தென்னைச் செய்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. சுன்னாவிலில் 600 ஏக்கரில் இராணுவம் முந்திரிகைச் செய்கையை முன்னெடுத்துள்ளது. இவை எல்லாம் வன்னியில் உள்ளன. கிராமக் குளங்களின் கீழான விசாலமான, பரந்த நெல் வயல்கள் இராணுவத்தினரால் செய்கை பண்ணப்படுகின்றன. குடிமக்கள் முன்னெடுக்க வேண்டிய, குடிமக்கள் ஈடுபட வேண்டிய இந்த வேலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குடிமக்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. சிவிலியன்கள் இந்தப் பகுதிகளில் வசிக்க முடியாது. ஏன் அங்கு அவர்கள் நடக்கக்கூட முடியாது. ஏனெனில் அந்தப் பிரதேசங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இடம்பெயர்ந்த ஒரு குடும்பம் வாழ்வதற்கும் தனது வேலையைச் செய்வதற்கும் ஆகக்கூடியது கால் பரப்புக் காணியே வழங்கப்படுகின்றது. அவர்களால் அந்தக் காணிக்குள் வாழமுடியுமா? இராணுவம் மிகப் பரந்த பிரதேசத்தை ஆக்கிரமித்திருக்கையில் இந்த சிறிய இடத்தில் அவனால் தப்பிப் பிழைத்து வாழ இயலுமா? அது போதுமானதா?

இரணைமடுக் குளத்துக்குப் பின்புறமாக, இரணைமடுக் குளத்துக்கும் இராணுவ குடியிருப்புக்கும் இடையில் வெலிஓயாவின் டொலர், கென்ட் பண்ணைகளுக்குப் பின்புறமாக உள்ள பகுதிகளுடன் சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் தூரத்தை இணைக்கும் ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எனக்கு நம்பகமாக அறிய வந்துள்ளது. சுமார் 70 முதல் 80 கிலோமீற்றார் நீளப் பிரதேசத்தில் உள்ள நிலங்கள் இந்த இணப்புக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. அத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு துர்நோக்கம் நிச்சயம் உள்ளது. இதை நாம் வெறுமன பார்த்துக்கொண்டு, போசாமல் அல்லது கேட்டுக்கொண்டும் சத்தமில்லாமல் இருக்கவேண்டிய ஒரு விடயமல்ல. குறிப்பாக வடக்கில் இராணுவத்தைப் பெருமளவில் பிரசன்னமாக வைத்திருப்பது சில அரசியல் இலக்குகளை அடைவதற்காகவே. அதற்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. என்பதையே எனது வலிதான வாதமாக நான் இங்கே முன் வைக்கிறேன். அப்படிச் செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அது இராணுவத்தின் வேலையல்ல. இராணுவம் யுத்தத்தில் போரிட்டது. இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. இராணுவம் முகாம்களுக்குள் இருந்தபடி சட்டரீதியாக அது ஆற்ற வேண்டிய உரிய பணிகளையே முன்னெடுக்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களிடமிருந்து கவர்ந்துகொள்ளும் விதத்தில் அல்லது அவர்களுக்குத் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் சில குறிப்பிட்ட – திட்டவட்டமான – அரசியல் இலக்குகளை அடைவதற்கு மட்டுமன்றி இப்போது குறிப்பாக வடக்கில் இனக் குடிப்பரம்பலில் பாரிய மாற்றத்தை உருவாக்குவதற்காகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இது ஏற்கனவே கிழக்கில் நடைபெற்றுள்ளதோடு அங்கு இப்போதும் இடம்பெறுகின்றது. (பலத்த குறுக்கீடுகளும் வாதப்பிரதிவாதங்களும்).

நான் சிங்களவர்கள் வசிக்கும் ஒரு மாவட்டத்தில் இருந்துதான் வந்தவன். எந்த ஒரு சிங்களப் பொதுமகனும் அவனுக்கு நான் தீங்கிழைத்தேன் என முறையிடமாட்டான். கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்களே! உங்களுக்குத் தெரியும், திருகோணமலையிலிருந்து வந்துள்ள உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு சென்றுள்ள உங்கள் அமைச்சர்களும் அங்குள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் இதனைத் தெளிவாகக் கூறியிருப்பார்கள். அதுதான் எங்கள் நிலைப்பாடு. எல்.ரி.ரி.ஈ.யினால் இனச்சுத்திகரிப்பு ஒருவேளை இருந்திருக்கலாம். முன்னர் இனவாத நடவடிக்கைகளின் போது தமிழர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். புலம்பெயர் சமூகம் எப்படி வந்தது? அதுதான், இப்போது முறையீடு செய்யப்படும் விடயம். 1950களில், 1960களில், 1970களில் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைத் திட்டங்களின் விளைவுதானே இந்தப் புலம்பெயர் சமூகம்? வன்முறைகளின் பெறுபேறாகத்தான் பொதுமக்கள் வெளியேறினார்கள். அப்படித்தான் புலம்பெயர் சமூகம் உருவானது. ஆகவே, நாங்கள் இனச் சுத்திகரிப்பை ஆதரிக்கவில்லை. தாங்கள் எங்கு வசித்தார்களோ அங்கு தொடர்ந்து வசிப்பதற்கு ஒவ்வொருவரும் உரித்துடையவர் என்பதே எமது நிலைப்பாடு. அது அவர்களின் அடிப்படை உரிமை. சிங்களவர்களாயினும், தமிழர்களாயினும், முஸ்லிம்களாயினும், எந்த இனத்தவரானாலும் அது அவர்களின் அடிப்படை உரிமை.

ஒரு பிரதேசத்தின் இனக் குடிப் பரம்பல் முறைமையை மாற்றும் விதத்தில் அரசினால் திட்டமிடப்பட்ட முறையில் மக்கள் குடியமர்த்தப்படுவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம். பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை போன்றவையும் இதனையே மறுத்துரைத்துள்ளன. அதற்காகத்தான் நாம் குரல் எழுப்புகின்றோம், கோருகின்றோம். அதற்கு மேல் எதனையும் நாம் எப்போதும் கோரவில்லை. இதைத் தவிர, எந்த இனத்தைச் சேர்ந்த எவரும் வடக்கு, கிழக்குக்கு வருவதையோ, குடியமர்வதையே, தங்கள் நிறுவனங்களை முன்னெடுப்பதையோ நாம் ஆட்சோபிக்கவில்லை. இதுதான் எமது நிலைப்பாடு.

யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. நான் நினைக்கிறேன் வேளை வந்துவிட்டது. தாம் கீழானவர்கள் என்று உணராமல், சுயகௌரவம் மற்றும் மதிப்புடன் வடக்கு,கிழக்குத் தமிழர்கள் தங்கள் பிரதேசத்தில் வாழமுடியும் என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பில் அரசு சரியான நடவடிக்கை எடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது. ஏனெனில் மீள் நல்லிணக்கத்துக்கு அது அடிப்படையானது. பல்வேறு இன சமூகங்களுக்கு இடையில் இந்நாட்டில் நல்லிணக்கம் மீள ஏற்பட வேண்டுமானால் – அத்தகைய மீள்நல்லிணக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம் எனில் – நாங்கள் எமது உரிமைகளை மீளப்பெற்றவர்களாக, சுயகௌரவம் மற்றும் மதிப்புடன் சமத்துவப் பிரஜைகளாக வாழும் நிலைமை உறுதிப்படுத்தப்பட வேண்டியதும் அதற்கு அத்தியாவசியமாகும்.

இந்தச் சபையில் இன்று நான் நடத்தப்படும் விதம் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லை. இதுதான் எமது கோரிக்கை. புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்கள் உட்பட இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிரதேசங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேணடும். அவை இராணுவப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுடக் கூடாது என்பதே எமது வலியுறுத்தல்.

இராணுவத்தின் வலிமையை அதிகரித்தல் என்ற பெயரில் அந்தக் குடும்பங்களை வடக்கு, கிழக்கில் குடியமர்த்துவதன் மூலம் இந்தப் பிரதேசங்களின் இனக் குடிப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் திட்டமிட்ட நடவடிக்கை இது என்பதை நான் இந்தச் சபையில் உரிமையுடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

வித்தியாசமான வகைப் பயிர்களை இத்தகைய பரந்த பிரதேசங்களில் இராணுவம் தொடர்ந்து செய்கை பண்ணுமானால், ஆயுதப்படைகள் அங்கிருந்து அகற்றப்பட்டாலும், அதன் பின்னரும் அங்கு அவர்களின் வீடு, வாசல்கள், அவர்களினால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலங்கள் மீதான உரிமைகள் எல்லாம் அங்கு நீடிக்கும். அவர்களின் வாழ்வாதாரங்கள் அங்கு நீடிப்பதால் அவர்கள் வடக்கு, கிழக்கின் நிரந்தர குடியிருப்பாளர்களாகிவிடுவர். அரசினால் மிகுந்த சுறுசுறுப்பு அவதானத்துடன் இப்போது முன்னெடுக்கப்படும். இந்த நடவடிக்கை திட்டம் உடன் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பதே எமது விநயமான கோரிக்கையாகும்.

Related Posts