Ad Widget

ஆயுதங்கள் வீட்டுக்குள் எப்படி வந்தன என்று புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கு தெரியாது!

“புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்”

இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது.

அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர்.

அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன.

பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் முன்னிலையானார்.
“சந்தேகநபர் வசித்த வீட்டில் பொலிஸாரால் மீட்கபட்ட ஆயுதங்கள் இருந்தமை உண்மைதான். எனினும் அவை எவ்வாறு அந்த அலுமாரிக்குள் வந்தன என்பது சந்தேநபருக்கு அறவே தெரியாது. ஆயுதங்கள் சந்தேநபரின் வீட்டுக்குள் எவ்வாறு வந்தன என்ற விவரத்தை ஆராய்ந்து தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ( என்ஐபி) அறிக்கையைப் பெற நீதிமன்று உத்தரவிடவேண்டும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இந்த நிலையில் சந்தேகநபரின் விளக்கமறியலை ஜனவரி 15ஆம் திகதிவரை நீடித்த நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தார் .

Related Posts