Ad Widget

ஆனையிறவு தாக்குதல் வழக்கு – சந்தேகநபர் விடுதலை

ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணிகளில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவரை, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23ம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி, சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சந்தேகநபரால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அவருக்கு எதிரான ஒரேயொரு சாட்சியமாக முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்த வழக்கில் அனுமதிக்கக்கூடிய சான்று என ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் இடைக்காலத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:

இந்த வழக்கின் எதிரி விடுதலைப் புலி உறுப்பினராம். அவர் ஓயாத அலைகள் தாக்குதல் அணியில் இடம்பெற்றிருந்தாராம். ஏதிரி ஆனையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டாராம் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த விடயங்கள் சம்பந்தமாக எதுவிதமான புலனாய்வு விசாரணைகளும் நடைபெறவில்லை.

அத்தகைய விசாரணைகள் நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

வவுனியா கூமாங்குளத்தில் வைத்து எதிரியை கடந்த 2011ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21ம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆப்தீன் கைது செய்திருந்தார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கொழும்பு தலைமையலுவலக பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி என்பவரால், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட தினத்தில் இருந்து 13 வருடங்களுக்கு முன்னார், 2000 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதல் அணியில் இணைந்திருந்த எதிரி, ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கியதாக இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் ஆப்தீன் மேலதிக புலனாய்வு விசாரணைகள் எதனையும் நடத்தவில்லை.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததைத் தவிர, எதுவிதமான புலனாய்விலும் ஈடுபடவில்லை

இந்த வழக்கில் கூறப்பட்டிருப்பது போன்று உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23 ஆம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதற்குரிய பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் புலனாய்வு விசாரணை சான்றுகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.

இந்த வழக்கின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திகதிளில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதம் என்ன, எத்தனை இராணுவ வீரர்கள் இறந்தார்கள், எத்தனை இராணுவ வீரர்கள் காயமடைந்தார்கள் என்பதற்கு ஒரு அறிக்கைகூட பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குறிப்பிட்டிருப்பது போன்று, ஆனையிறவு இராணுவ முகாம் தாக்கப்பட்டது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சினால்கூட, எதுவிதமான அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 தாக்குதல் அணியினர் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திகதிகளில்தான் ஆனையிறவு முகாமைத் தாக்கினார்களா என்பதற்கும் எந்தவிதமான சான்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் எதிரியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளவர் வழங்கியதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையான தகவல்களைக் கொண்டுள்ளதா என்பதைக் கூட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு புலனாய்வு செய்து சாட்சியங்களைத் தேடவில்லை.

எனவே, விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதல் அணியில் இணைந்திருந்த எதிரி, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய இரண்டு தினங்களில் ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கினார் என்றோ அல்லது இராணுவ முகாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது என்றோ இந்த நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தக்கூடிய, சுதந்திரமான எந்த சாட்சியங்கள் எதுவும் வழக்குத் தொடுநரினால் முன்வைக்கப்படவில்லை.

இதேபோன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாகக் கொண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் நாகமணி தெய்வேந்திரன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற வழக்கில் நீதியரசர்களான சி.வி.விக்னேஸ்வரன், அமீர் இஸ்மாயில், மார்க் பெர்னாண்டோ ஆகிய நீதியசர் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் இந்த வழக்கில் மேற்கோள் காட்டுகின்றது.

நாகமணி தெய்வேந்திரன் வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதியரசர்கள் மூவரும், குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது, சுயாதீனமானதாக இருக்க வேண்டும். குற்றச் செயல் உண்மையாக நடந்ததாக இருக்க வேண்டும். வேறு சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்மூலம் ஒப்புறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் நியாயமான சந்தகத்திற்கப்பால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கில் எதிரி 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கினார் என்பதை வழக்குத் தொடுனர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியிருப்பதனால் எதிரியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடைசி வழக்கும் இத்துடன் முடிவடைந்துள்ளாக நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கின் முடிவில் தீர்ப்பளித்ததன் பின்னர் தெரிவித்துள்ளார்.

Related Posts