Ad Widget

ஆனையிறவு தாக்குதல் உட்பட இரு வழக்கின் தீர்ப்பு விரைவில்

விடுதலைப் புலிகள் ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான, சந்தேகநபருக்கு எதிரான வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த 2000ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் மூலம், ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கிய குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்டவருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வருகின்றது.

இந்த வழக்கில் விசாரணைகள் யாவும் முடிவடைந்து சட்டத்தரணிகளின் தொகுப்புரையும் முடிவுற்ற நிலையில், யாழ் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பிணையில் சென்ற சந்தேகநபர், நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, அவர் இல்லாமலேயே அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விசாணைகள் முடிவுற்றதையடுத்து, இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts