Ad Widget

ஆனை­யி­றவு புகை­யி­ரத நிலை­யத்­திற்கு புதிய பெய­ரிடும் நட­வ­டிக்­கை­யினை தடுத்து நிறுத்த வேண்டும் -விஜ­ய­கலா

vijayakala-makeswaranஅரசாங்கத்தினால் தற்போது புனரமைக்கப்பட்டுவரும் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு புதிய பெயரிடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் எந்தவித நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துமாறுகோரி யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிநிதிகள் அமைச்சர்களான வாசுதேவநாணயக்காரர், குமாரவெல்கம ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு புதிய பெயர் சூட்டப்படவேண்டுமென்று கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தன கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆனையிறவு புகையிரத நிலையம் புனரமைக்கப்படுவது குறித்து பிரதேச மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இத்தகைய புனரமைப்பினை எதிர்பார்த்துள்ளனர். இந்த புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டதையடுத்து அதற்கு புதிய பெயர் ஒன்றை இடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையானது வடபுலத்து தமிழ் மக்களின் மனங்களில் வெறுப்புணர்வை உண்டாக்கியுள்ளது. குறித்த புகையிரத நிலையத்திற்கு மீளப்பெயரிடும் முயற்சிகள் எதனையும் தடுத்து நிறுத்துவதற்கும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த புகையிரத நிலையத்திற்கு பழைய பெயரையே (ஆனையிறவு புகையிரத நிலையம்) தொடர்ந்து நிலைத்திருக்க செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்களிடையே நட்புறவையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கையாயினும் வடபுலத்து தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தாதவகையில் அமையவேண்டும்.

வடக்கு மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் தங்களின் தமிழ் பாரம்பரியங்களை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு உரிய செயற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனையிறவு புகையிரத நிலையத்தின் உத்தேச பெயர் மாற்றும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு வடமாகாண தமிழ் மக்கள் சார்பில் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts