அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
அன்புடையீர்,
பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கவும் காலம் கடந்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதற்கும், குற்றம் புரிந்தவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தமைக்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் காடைத்தனத்தாலும், தீயினாலும் இழந்த உயிர்களுக்கும், உடமைகளுக்கும் தகுந்த நட்டஈடு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லுகின்ற வேளைகளில், அவருக்காக பணியாற்ற ஒருவரும் நியமிக்கப்படாமை துர்பாக்கியமே. இத்தகைய சந்தர்ப்பங்களில் பதில் கடமைக்கு யாரேனும் எதிர் காலத்தில் நியமிக்கப்பட வேண்டுகிறேன்.
இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதில் பிழை இருக்காது என எண்ணும் விடயம் ஒன்று, எதிர் காலத்தில் இன விரோத முரண்பாடு ஏற்பட ஏதுவாக இடங்கொடுக்கக் கூடிய வகையில், சில அரசியல் தலைவர்கள் அங்கும் இங்குமாக சில இடங்களில், வேறு இன மக்களை குடியேற்றுவது நல்லதுக்கல்ல.
இச்செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி விடுவது சாலப் பொருத்தமானதாக இருக்கும் ஏனெனில் உள்ளுர் வாசிகளும் சரி புதிதாக குடியேறுபவர்களும்சரி பயனடைவதில்லை. ஆனால் சிலர் மட்டும் வேறு சிலரின் வாழ்வாதாரத்தை பறித்தே வாழ்கின்றனர்.
இனவாதம், வேறு சில முரண்பாடுகள் அத்தனையும் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தும் வரை இச் செயற்பாடுகளுக்கு தடை விதியுங்கள். அதன் பின் கடந்த காலத்தைப்போல ஒரு பிரதேசத்து மக்களின் விகிதாசாரத்தை பாதிக்காத வகையில் உள்ளுரில் உள்ளோருக்கு முதல் இடம் கொடுத்து அயல் மாவட்ட மக்களுக்கென்றும், அதேபோன்று ஏனைய மாவட்ட மக்களுக்கென, காணிகளை வழங்குவதே பிரச்சினைகள் இன்றி மக்கள் வாழ வழிவகுப்பதாகும்.
ஆண்டாண்டு காலமாக 1915ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓர் சிறு இனப் பிரச்சினையை தவிர்த்து 1956ம் ஆண்டு வரை இனப்பிரச்சினை என்பது நம் மக்கள் அறியாத ஒன்றாகும். தயவு செய்து நம் மக்களை முதலாவதாக பழைய நிலைமைக்கு கொண்டு செல்லுங்கள். நம்மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்வார்கள்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.