ஆட்டிறைச்சி எலும்பு மார்பு பகுதியில் சிக்கியதால் குடும்ப பெண் பலி!

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு இரத்த குழாயில் சிக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது.

அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது. மறுநாள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அதற்கு அனுமதிக்காக குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கமரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

Related Posts