Ad Widget

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்ததால் ஏமாற்றமில்லை

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதையே நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆதலால், 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்காக அதிகம் செய்யவில்லையென்பது எங்களுக்கு ஏமாற்றமாக இல்லை’ இவ்வாறு வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் (23) முடிவடைந்துள்ளமையை அடுத்து, இந்த 100 நாட்கள் தொடர்பில் சி.வி.கே. யிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி: புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கும்போது எதிர்பார்த்ததுக்கும் தற்போது 100 நாள் முடிவடைந்துள்ள நிலையிலும் அதில் எவ்வாறான நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவித்தனர்?

பதில்: தமிழ் மக்கள் தங்கள் நன்மைகள் என்பதற்கு அப்பால் தங்களுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அநீதிகள் அடக்குமுறைகளின் காரணமாக ஒரு ஆட்சி மாற்றத்தையே அதிகம் எதிர்பார்த்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தென்னிலங்கையை மையப்படுத்தியே பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

கேள்வி: தமிழ் மக்களுக்காக புதிய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: நான் அவ்வாறு கூறவில்லை. தமிழ் மக்கள் தங்கள் முக்கிய பிரச்சினையான மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரை கண்டறிதல் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களை எதிர்பார்க்கின்றனர். அதில் மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் 100 நாளில் வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 1,000 ஏக்கர் விடப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடயத்தில் ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தவிர எதிர்பார்க்கு ஏற்ற விதத்தில் எவற்றையும் அரசாங்கம் செய்யவில்லை.

கேள்வி: புதிய அரசாங்கத்தால் வடமாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு நன்மைகள் அளிக்கும் வகையில் சில நிர்வாக மாற்றங்கள் அரசாங்கத்தால் உங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டன. அதன் மூலம் நன்மைகள் அடைந்தீர்களா?

பதில்: வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரை மாற்றித்தருமாறு கோரினோம். அதனை இந்த அரசாங்கம் செய்தது. புதியவர்களை நியமித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் எங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என நம்பினோம். வடமாகாணத்தில் பல கிராமிய வீதிகள் திருத்தப்படவேண்டும், புனர்வாழ்வு பெற்றவர்கள், மாற்றுவலுவுள்ளோர் ஆகியோரின் வாழ்வாதாரம் காக்கப்படுதல், கல்வித்துறையை விருத்தி செய்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரையில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். எனினும், அது நடக்கவில்லை. சிபாரிசு கூட இடம்பெறவில்லை.

கேள்வி: புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் வடமாகாண சபையுடன் இணைந்து நட்புறவுடன் செயற்பட்டார்களா?

பதில்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பதவியேற்றவுடன் மத்திய அமைச்சர்கள் பலர் இங்கு வருகை தந்து எங்களுடன் நட்புப் பாராட்டினார்கள். நன்மைகள் பயக்கும் விடயங்கள் தொடர்பில் உறுதிமொழிகளை வழங்கினார். ஆனால், அவை சிலகாலம் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மத்திய அமைச்சர்கள் சிலர் எதிரியாக பார்த்தனர்.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம். இது தொடர்பில் உங்கள் பார்வை?

பதில்: நான் ஒரு ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் என்ற ரீதியில் மட்டும் இதற்கு பதில் கூறுவேன். ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தற்போதய சம்பள அளவுத்திட்டத்துக்கமைய ஓய்வூதியத் திட்டத்தை மீளாய்வு செய்வதாக கூறியது. ஆனால் இந்த அரசாங்கம் அது தொடர்பில் கதைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்தது. இது நன்மை பயக்கும் விடயமாக இருந்தது. இரண்டு அரசாங்கமும் தேசிய அரசாங்கம். தெற்கிலுள்ள மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நடந்துகொண்ட நடந்துகொள்ளும் அரசாங்கங்கள் ஆகும்.

Related Posts