Ad Widget

ஆட்சியில் இருக்கும்போது அட்டகாசம் செய்யக்கூடாது – முதலமைச்சர் சி.வி.

ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

‘கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம், மஹிந்தோதய தொழில்நுட்பபீடம் எனப் பெயர் சூட்டி அவற்றின் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு நான் பல பாடசாலைகளுக்குச் சென்றிருந்தேன். அவை அனைத்தும் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக்கூடமாகவோ அல்லது மஹிந்தோதய தொழில்நுட்பப்பீடமாகவேதான் திறப்பு விழா நடைபெற்று முடிந்துவிட்டது.

ஆட்சி மாற்றத்தின் காரணமாகவோ பிற காரணங்களாலோ மஹிந்தோதய என்ற அடைமொழி மறைந்து தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில் நுட்பப்பீடம் என்று இன்றைய திறப்பு விழாக்கள் மாற்றமடைந்து விட்டன. எத்தனை மாற்றங்கள்!

இதை நான் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் என்னவெனில் நாம் ஆட்சியில் இருக்கும்போது எமது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, எமது பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் எமக்கு ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதை இச்சிறு சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என்பதற்காக ஆகும்.

வன்னி மாணவர்கள் சுமார் 10 தொடக்கம் 15 கிலோ மீற்றர் தூரம் வரை சைக்கிளில் சென்று தமது மாலை நேர கல்வியை கைதேர்ந்த ஆசிரியர்களிடம் இருந்து கற்று தேறி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் உருவேற்று வருவதை அறிந்து கொண்டுள்ளேன்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு வீட்டில் வேலைப்பளு என்கின்ற விவகாரமே கிடையாது. பாடசாலை செல்கின்ற மாணவர்கள் படிப்பது மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கடுமையாக உழைக்க வேண்டிய இங்குள்ள மாணவர்களும் அவர்களுக்கு ஈடாக பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக் கொள்வது பெருமைக்குரியது.

நகர்ப்புற மாணவ மாணவியர் தேக ஆரோக்கியத்துக்காக விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள் அல்லது தேகப்பயிற்சி செய்கின்றார்கள். இங்குள்ள கிராமப்புற மாணவர்களோ தோட்டத்தில் கடுமையாக வேலை செய்து தமக்குரிய உடல் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் பெற்றுக் கொண்டு தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்கின்றார்கள் என்று அறிகின்றேன். இம் மாணவர்களைப் பார்த்து ஏனைய மாணவர்களும் இவ்வாறான பயனுள்ள செயல்களில் இறங்க வேண்டும். பொருளாதார விருத்தியும் பொறுப்புள்ள கல்விப் பயிற்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து எமது மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும்’ என்றார்.

Related Posts