Ad Widget

ஆட்சிக்கவிழ்ப்பிற்காகவே ஜெனிவாவில் பிரேரணைகள் : கஜேந்திரக்குமார்

2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற உப குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான விசேட இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது.

உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன “என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts