Ad Widget

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்குத் தீர்வு

Transferவடமாகாணத்தின் கஷ்டப் பிரதேசங்களில் 6 வருடத்திற்கு மேல் சேவையாற்றிய 152 ஆசிரியர்களுக்கு 2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இடமாற்றத்தினை வழங்குவதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் மேற்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை ஜனவரி 1ஆம் திகதி வழங்குவது என முடிவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி ஆசிரியர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படவிருந்த இடமாற்றமானது ஏப்ரல் மாதத்திற்கு வடமாகாண கல்வி அமைச்சினால் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மேற்படி ஆசிரியர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (27) யாழ். செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி திணைக்களத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது, ‘ஏற்கனவே இடமாற்றம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தங்கியிருந்த வீடுகளை கைவிட்டுள்ளதுடன் பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். இந்நிலையில், தற்போது வடமாகாண கல்வி அமைச்சு, பொறுப்பற்ற முறையில் இடமாற்றத்தை பிற்போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

எங்களுக்கு 2014 ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்படும் என வடமாகாணக் கல்வி அமைச்சினால் கடந்த நவம்பர் மாதம் உறுதிப்படுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது அதனை மாற்றுவது என்பது பொறுப்பற்ற செயல். எனவே இடமாற்றத்தினை ஜனவரி மாதத்திற்கே வழங்க வேண்டும்’ என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவுக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனுக்கும் இடையில் வடமாகாண கல்வி திணைக்களத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே, மேற்படி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Related Posts