Ad Widget

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

நிதியமைச்சராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக செயற்பட்டார்.

ஜோர்ஜியாவின் டிபிலிஸில் நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டம் தற்போது நிலவும் தொற்று நிலைமை காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. ஒஸ்ரியா மற்றும் மொங்கோலியாவின் ஆசியி அபிவிருத்தி வங்கி (ஏ.டீ.பீ.) ஆளுநர்கள் இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை ஆளுநர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

வணக்கம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்தமையை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். எதிர்வரும் ஆண்டு இக்கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளமை மேலும் விசேடமானதாகும்.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக எதிர்பாராத வகையில் உயிரிழப்புகள் நேர்வதுடன், நமது வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், எமது கலாசாரம் பயன்பாடுகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளது. அவ்வாறாக சூழலில் மீண்டும் ஒற்றுமையாக எழுந்திடுவதற்கான சரியான தருணமாக இதனை கருதுகின்றேன்.

இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. எமது வலயம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று அதனை சமாளிக்கும் சக்தி தொடர்பிலும் ஆசியா பிரபலமானது. எனவே, தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் கூட, நமது பிராந்தியமானது உலகின் மேம்பாட்டிற்கு தலைமைதாங்குவது என்பதில் ஆச்சரியமில்லை.

அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடைய சூழலுக்கான நிலையான பயன்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

எங்கள் கொள்கை தீர்வுகள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான நமது வாழ்க்கை முறையை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பொதுவான பிரச்சினைகளை தீர்க்க கூட்டு ஒத்துழைப்பே தற்போது தேவைப்படுகிறது.

இந்த இலக்கை அடைய, இயற்கை வளங்களை மிகவும் திறமையாக பயன்படுத்த உதவும் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பின்பற்ற நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.

எனவே, ‘பசுமை பொருளாதாரத்தில்’ சேவை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை இலங்கை ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளது. அதே நேரத்தில், பொதுத்துறை பொது சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை நமது அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, நாம் அனைவரும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிச் செல்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம்.

அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு புதிய அணுகுமுறையாக அமைவதுடன் அதன்மூலம் நெறிப்படுத்தப்பட்ட வள முகாமைத்துவம் இடம்பெறும்.

பெண்களின் அதிகாரமளித்தல் என்பது கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சமாகும். ஒரு நியாயமான சமூகத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாம் அடையாளம் வேண்டும்.

இது தொடர்பாக ஆசிய வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதிலும், அவர்களுக்காக அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் உறுப்பு நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர் உதவியை உடனடியாக வழங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவை நாம் நினைவுகூர வேண்டும்.

தடுப்பூசிக்கு இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு 9 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆதரவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

நாங்கள் ஒரு பயங்கரமான சவாலை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளதுடன், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக, அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் 55ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பதுடன், உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய பிரார்த்திக்கின்றேன்.

Related Posts