Ad Widget

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை கையாளும் நடைமுறையில் மாற்றம்

aust-falgஅவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை கையாளுகின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடிய சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

புலம்பெயர்வு சட்டத்தின் மீதான திருத்தங்களின் பிரகாரம், புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவது இலகுவாகுமென அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தங்களின் பிரகாரம், தமக்கு பாதுகாப்புக் கோரி நிற்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அதற்குரிய ஆவணங்களை விரைவாக சமர்ப்பிப்பது கட்டாயமானதாக மாறுகிறதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்வு சட்டத்தின் மீதான திருத்தங்கள் அங்கீகரிக்கப்படுமானால், தமது கோரிக்கைகள் நியாயமானவை என நிரூபிப்பது புகலிடக் கோரிக்கையாளரின் பொறுப்பாக இருக்கும். அத்துடன், ஒரு புகலிடக் கோரிக்கையாளர் தமது அடையாளத்தை நிரூபிக்க முடியாத அல்லது நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவரது பாதுகாப்பு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுமென குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறேனும், சொந்த நாடு இல்லாதவர்கள் போன்ற சில புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருக்க மாட்டாது என்பது உத்தேச திருத்தங்கள் ஊடாக அங்கீகரிக்கப்படும்.

எனினும், சுய அடையாளத்தை நிரூபிக்கும் தலையாய பொறுப்பு புகலிடக் கோரிக்கையாளர் சார்ந்ததாக இருக்குமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்கால நீதிமன்றத் தீர்ப்புக்கள், அதிகப்படியான புகலிடக் கோரிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் உத்தேச திருத்தங்களை முன்மொழிய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts