Ad Widget

அழைப்புக்கும் மாநாட்டுக்கும் தொடர்பில்லை: முதலமைச்சர் விளக்கம்

vickneswaranஇந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வடமாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனின் அந்தரங்கச் செயலாளர் ஏ.சுந்தரலிங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘நேற்றைய தினம் சென்னையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில தினசரியான இந்துவில் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கிறார் விக்னேஸ்வரன் என்ற தலைப்பில் பிரசுரமான செய்தி பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்துவதாக அர்த்தப்படுத்தப்பட்டு ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றியறிதலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இலங்கைக்கு விஜயம் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அக்கடிதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இக்கடிதம் வடமாகாண சபையின் முதலாவது அமர்விற்குப் பிறகு உடனடியாக அனுப்பப்பட்டது. எங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் எங்களது பிரதேசத்துக்கு விஜயம் செய்து நிலவரங்களை நேரில் பார்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதும் மரியாதையின் நிமித்தமான வழமையான காரியங்களாகும்.

யாழ்பாணத்திற்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுடன் சேர்த்து முதலமைச்சரின் கடிதம் பற்றி இந்துவின் செய்தியில் குறிப்பிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானதாகும்’ என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts