Ad Widget

அலரிமாளிகைக்கு முன் பதற்றம்!!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரிமாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அலரிமாளிகைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பஸ் மற்றும் பொலிஸ் ட்ரக் வண்டிகளை அகற்றுவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று (29) நடவடிக்கை எடுத்தபோது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

போராட்டம் அலரிமாளிகைக்கு முன் ஆரம்பமாகிய தினமன்று பஸ் மற்றும் ட்ரக் ரக வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோறுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த பஸ் மற்றும் ட்ரக் வாகனங்கள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முறைப்பாடளிக்க சென்றிருந்தபோது, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாதென கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்ததாக அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

இந்நிலையில், இன்று காலை குறித்த பஸ் மற்றும் ட்ரக் வண்டிகளை பொலிஸார் அகற்றுவதற்கு சென்றிருந்தபோது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்தத நிலையில், நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காயமடைந்த இளைஞரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிஸார் தாக்கவில்லையெனவும், பொலிஸ் வாகனங்களில் சிக்கியுள்ள பொருட்களை அகற்ற பொலிஸ் அதிகாரி சென்ற போது அதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனுமதிக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts